தமிழகத்தில் களைகட்டிய தேர்தல் களம் : உற்சாகத்தில் தொண்டர்கள்
அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் திருப்பூரில் பிரசாரம் மேற்கொண்டார்.
விஜயகாந்த் போல வேடமிட்டு ஆடிய கலைஞர்
அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் திருப்பூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் போல், வேடமிட்டிருந்த நடனக் கலைஞர், அவரைப் போலவே நடனம் ஆடினார். அதன்பின், கால்களை துணியால் கட்டிக் கொண்டு ஒரு சிறுவன், அற்புதமாக நடனமாடினான்.
மக்கள் நீதி மய்யம் சார்பில் சென்னையில் பிரசாரம்
சென்னையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, கூட்டத்துக்கு முன்னர், மேள - தாளத்திற்கு ஏற்ப, கட்சித் தொண்டர்கள், ஆர்வமாக நடனம் ஆடினர்.
நடனமாடிய படியே வாக்கு சேகரித்த வேட்பாளர்
நீலகிரி அ.தி.மு.க. வேட்பாளர் தியாகராஜன், ஊட்டியில் வாக்கு சேகரித்தார். அப்போது, படுகர் இன மக்களுடன் இணைந்து, அவர் பாரம்பரிய நடனம் ஆடினார். அவருடன் வந்த கட்சியினரும், நடனமாடி வாக்கு சேகரித்தனர்.
அமைச்சர் பிரசாரத்தில் தாரை, தப்பட்டை அடித்த மாணவர்கள்
சத்தியமங்கலம் அருகே உள்ள காவிலிபாளையத்தில், திருப்பூர் அ.தி.மு.க. வேட்பாளர் ஆனந்தனை ஆதரித்து அமைச்சர் செங்கோட்டையன் பிரச்சாரம் மேற்கொண்டார். அமைச்சர் வருவதற்கு முன்பாக, தாரை தப்பட்டை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், 18 வயதுக்கு குறைவான பள்ளி மாணவர்கள் பங்கேற்று தாரை, தப்பட்டை கருவிகளை இசைத்தனர்.
ஊர்வலமாக வந்து வாக்கு கேட்ட அதிமுக வேட்பாளர்
பொள்ளாச்சி அ.தி.மு.க. வேட்பாளர் மகேந்திரன், வித்தியாசமான பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார். நாதஸ்வரம், மேள - தாளம் ஒலிக்க அவர் பிரம்மாண்டமான பேரணியை நடத்தியபடியே, வாக்கு சேகரித்தார்.
தேமுதிக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்
திருச்சி தே.மு.தி.க. வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து, திருவெறும்பூரில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. அப்போது கூட்டத்திற்கு வந்திருந்த தொண்டர் ஒருவர், இசைக்கேற்ப நடனமாடி பொது மக்களைக் கவர்ந்தார்.
பறை இசைத்து வாக்கு கேட்ட வேட்பாளர்கள்
ஹைட்ரோ கார்பன் மற்றும் ஷேல் கேஸ் திட்டங்களை கை விட வேண்டும், காவிரி பாசனப் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நிலம் - நீர் பாதுகாப்பு அமைப்பு மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் கூட்டமைப்பு சார்பில் 10 வேட்பாளர்கள் மயிலாடு துறை தொகுதி தேர்தலில் களம் புகுந்துள்ளனர். அவர்கள் மயிலாடுதுறை ரயில்வே நிலையம் அருகே ஒன்று திரண்டு, பறை இசைத்தபடி, வாக்கு சேகரித்தனர்.