வனப்பகுதி, சாலை, ரயில்வே இடத்தில் விளம்பரம் - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
இயற்கை மற்றும் அரசு சொத்துக்கள் மீது விளம்பரம் செய்வதை தடுக்க உத்தரவிட கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள மலைகள், காடுகள், தேசிய நெடுஞ்சாலைகள், பாலங்கள், ரயில் பாலங்கள், குன்றுகள் உள்ளிட்டவற்றில் விளம்பரம் செய்ய அரசியல் கட்சியினருக்கு தடை விதிக்கவும், தற்போது உள்ள விளம்பரங்களை சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அழிக்க உத்தரவிடகோரியும், வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழகத்தில் மேற்கூறிய இடங்களில் அரசியல் கட்சிகள் விளம்பரம் செய்து உள்ளனவா? என்று மனுதாரரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது மனுதாரர் யானை ராஜேந்திரன், பல்வேறு புகைப்பட ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்பித்தார். பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அவகாசம் கோரினார். விளம்பரங்களை அழிக்கவும், மீண்டும் வரையாமல் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.