பல துறைகளில் சாதனை படைத்த 9 பெண்கள் : "தங்க தாரகை" விருதுகள் வழங்கி கௌரவிப்பு
பல துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் தங்க தாரகை விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இலக்கியம், வர்த்தகம், அறிவியல் உட்பட பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் தங்க தாரகை விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் அரசியல் பிரமுகர்கள், இலக்கியவாதிகள், தொழில்துறை பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழ் இலக்கியத்திற்காக எழுத்தாளர் பாமாவுக்கும், ஆன்லைன் வர்த்தகத்தில் சாதனை படைத்ததற்காக அருள் மொழி சரவணனுக்கும், வர்த்தகத்தில் சாதித்ததற்காக ஸ்ரீராம் ஆயுள் காப்பீடு
நிறுவன மேலாண் இயக்குனர் டாக்டர் அகிலா சீனிவாசனுக்கும் தங்க தாரகை விருது வழங்கப்பட்டது.
இதுபோல, பள்ளி மாணவர்களும் நாசாவுக்கு செல்லலாம் என்ற நிலையை உருவாக்கிய, Space kidz india இயக்குனர் ஸ்ரீமதி கேசனுக்கு அறிவியல் துறையிலும், மாற்று திறனாளிகளுக்காக கூடைப்பந்து பயிற்சி மையத்தை உருவாக்கியுள்ள மாதவி லதாவுக்கு விளையாட்டு துறையிலும் விருது வழங்கப்பட்டது. பாதாள சாக்கடையில் வீசப்பட்ட குழந்தையை மீட்டு வளர்த்த துணை நடிகை கீதாவுக்கு சமூக சேவைக்கான விருது வழங்கப்பட்டது.
விழாவில் பங்கேற்ற அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகை கீதாவுக்கு அரசு பன்னோக்கு மருத்துவமனையில் வேலைக்கான ஆணையை இ மெயில் மூலமாக அனுப்ப உத்தரவிட்டார்.
குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தியதற்காக ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதாவுக்கும், பொழுதுபோக்கு துறையில் கிராமிய பாடகி ராஜலட்சுமி மற்றும் நடிகை ஜஸ்வர்யாவுக்கும் வாழ்நாள் சாதனையாளராக பின்னணி பாடகி சித்ராவுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.