கிருஷ்ணகிரி அருகே 5 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்ட கோதண்டராமர் சிலை
பிரம்மாண்ட கோதண்டராமர் சிலை கிருஷ்ணகிரி அருகே உள்ள ஆற்றுப்படுகையில் சிக்கி உள்ளதால் அவற்றை மீட்க அதீத இழுவைத்திறன் கொண்ட வாகனத்தை தேடி பயணக் குழு சென்னைக்கு விரைந்தது..
கர்நாடகா மாநிலத்தில் நிறுவுவதற்காக பிரம்மாண்ட கோதண்டராமர் சிலை கடந்த டிசம்பர் 7ஆம் தேதி திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டது. கடந்த 5 தினங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி அடுத்த குருபரபள்ளி வந்தடைந்த இந்த சிலை அங்குள்ள மார்கண்டேய நதி பாலம் அருகே மண் சாலை அமைத்து சிலையை கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றது. ஆனால் இந்த பணிகள் தோல்வியில் முடிந்ததால் 5 நாட்களாக சிலை அதே பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது கோதண்ட ராமர் சிலையை மீட்க அதீத இழுவை திறன் கொண்ட வாகனத்தை சென்னையிலிருந்து வரவழைக்க பயணக் குழு சென்னை விரைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது 62 நாட்கள் கடந்த நிலையில் கர்நாடகா மாநில எல்லையான அத்திபள்ளியை சென்றடைய இன்னும் 50 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.