வடமதுரை நகரையே "பசியில்லா வடமதுரை" ஆக்க முயற்சித்துவரும் இளைஞர்கள்...
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை சேர்ந்த இளைஞர்கள் சிலர் பசியில்லா வட மதுரை என்ற அமைப்பின் மூலம் சேவை செய்து வருகிறார்கள்...
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையை சேர்ந்த இளைஞர்கள் பிரேம்குமார், விசுவநாதன், கார்த்திக், கருப்பையா ஆகியோர் வெவ்வெறு நிறுவனங்களில் வேலை செய்துவந்தாலும் ஒன்று சேர்ந்து, பசியில்லா வட மதுரை என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். சாலையோரம் கேட்பாரற்று கிடக்கும் முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என ஆதரவின்றி தவிக்கும் மனிதர்களை அடையாளம் கண்டு அவர்கள் கணக்கெடுத்துள்ளனர்.
அந்த எண்ணிக்கைக்கு ஏற்ப, தினமும் உணவு மற்றும் தண்ணீர் கேன்களை இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லும் இந்த இளைஞர்கள், ஆதரவற்ற அனைவருக்கும் கொடுத்து வருகின்றனர். மன நலம் பாதிக்கப்பட்டு பல ஆண்டுகளாக குளிக்காமல், சாலையில் திரிந்து கொண்டிருந்த மனிதர்களுக்கு, முடிவெட்டி, குளிப்பாட்டி, நல்ல உடை, காலணி , போர்வை என கொடுத்து வாஞ்சையோடு பராமரித்து வருகின்றனர்.
மனிதநேயமுள்ள இந்த இளைஞர்களின் சேவைக்கு ஆதரவு தரும் அவர்களின் குடும்பத்தினர், நிதி உதவியும் செய்கிறார்கள். கேட்பாரற்று கிடப்பவர்களுடன் செல்பி எடுத்து, இணையதளங்களில் பதிவிட்டு பிரபலம் அடைய முயற்சிக்கும் இளைஞர்களுக்கு மத்தியில், வடமதுரை நகரையே பசியில்லா வடமதுரை ஆக்க முயற்சித்துவரும் இந்த இளைஞர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்...