பொது காப்பீடு செய்வது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் - தலைமை செயலாளருக்கு மதுரைக்கிளை உத்தரவு
அடுத்த ஆண்டு நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் மாடுபிடி வீரர், பங்கேற்பாளர், பார்வையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பொது காப்பீடு செய்வது குறித்து பரிசீலிக்க தமிழக தலைமை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொது நல வழக்கு, விசாரணைக்கு வந்தது. அவர் தமது மனுவில், ஜல்லிக்கட்டு போட்டியை காண்பவர்களுக்கும், காப்பீடு வழங்க கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு, முன்பு விசாரணைக்கு வந்த போது, மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், அடுத்த ஆண்டு முதல் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் அனைவருக்கும் காப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் கூறப்பட்டிருந்தது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அடுத்த ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்களில் மாடுபிடி வீரர், பங்கேற்பாளர், சுற்றுலா பயணிகள் மற்றும் அப்பகுதி மக்கள் என அனைவருக்கும் பொது காப்பீடு செய்வது குறித்து பரிசீலிக்க தமிழக தலைமை செயலருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.