களைகட்டிய ஜல்லிக்கட்டு போட்டி : சீறிப்பாய்ந்த காளைகள் - அடக்கிய வீரர்கள்
களைகட்டிய ஜல்லிக்கட்டு போட்டி : சீறிப்பாய்ந்த காளைகள் - அடக்கிய வீரர்கள்
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பாலக்குறிச்சி ஆவாரங்காட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதனை திருச்சி மாவட்ட ஆட்சியர் ராசாமணி கொடியசைத்து துவக்கி வைத்தார். திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 600 காளைகள் கலந்து கொண்டன. பல மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 300க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர். இறுதியில் வெற்றி பெற்ற காளைகளுக்கும் மாடு பிடி வீரர்களுக்கும் பரிசுகளும் வழங்கப்பட்டன.
திண்டுக்கல் நத்தமாடிபட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமர்சியாக நடைபெற்றது. பாரம்பரிய முறைப்படி, கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டதை தொடர்ந்து, 400 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக சீறிப்பாய்ந்தன. 500 மாடு பிடி வீரர்கள் காளைகளை அடக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நொடிக்கு நொடி விறுவிறுப்பாக சென்ற இந்த போட்டியை அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர்.
பழனி பெரியகலையம்புத்தூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில், திருச்சி, தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இதில் கலந்துகொண்ட பல காளையர்கள், வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முற்பட்டனர். அப்போது, மாடுகள் முட்டியதில் சில மாடுபிடி வீரர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே ராசாண்டார் திருமலையில் 57 வது ஆண்டாக ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அன்பழகன், போட்டிகளை துவக்கி வைத்தார். மத்திய அரசின் ஜல்லிக்கட்டு கண்காணிப்பு குழு உறுப்பினர் கே.எஸ்.மிட்டல் போட்டிகளை கண்காணித்தார். இந்த போட்டியில் 600 மாடுகள் கலந்து கொண்ட நிலையில் 350க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர். இதில் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. மாவட்ட கண்காணிப்பாளர் ராஜசேகரன் தலைமையில், 400க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் வன்னியர் விடுதியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்கிய மாடுபிடி விரர்கள் 15 பேர் காயம் அடைந்தனர். இந்த போட்டியில் புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 400 காளைகள் கலந்து கொண்டன. வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகளை வீரர்கள் அடக்கினர்.