'181' 24 மணி நேர கட்டணமில்லா மகளிர் உதவி மையம்...

தமிழகத்தில் கடந்த டிசம்பர் 10ஆம் தேதி தொடங்கப்பட்ட பெண்களுக்கான 24 மணி நேர கட்டணமில்லா உதவி மையம், இந்த ஒரு மாதத்தின் சாதனைகளும், சவால்களும்.

Update: 2019-01-10 08:28 GMT
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் டெல்லியில் நடந்த நிர்பயா பாலியல் வன்கொடுமையை தொடர்ந்து, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக 181 என்ற பெண்கள் உதவி அழைப்பு எண் அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் பல்வேறு மாநிலங்களிலும் 181 இலவச சேவை கொண்டுவரப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, தமிழகத்திலும் 2 ஆண்டுகளுக்கு முன்னர் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு, கடந்த மாதம் 10ஆம் தேதி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது. மத்திய அரசின் "நிர்பயா நிதி" யில் இருந்து இதற்கான பட்ஜெட் ஒதுக்கப்பட்டு, மாநில சமூக நலத்துறையின் மூலம் இது செயல்படுத்தப்படுகிறது. இதற்காகவே, முதுகலை சமூகப்பணி பட்டப்படிப்பு முடித்தவர்கள், சட்டம் படித்தவர்கள், உளவியல் பட்டதாரிகள் போன்றோர்  பணியில் அமர்த்தப்பட்டு, அவர்களுக்கு பிரத்யேக பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 181இல் 14,400 அழைப்புகளை ஏற்றுள்ளதாகவும்,  அதன் மூலம் 2,336 புகார்கள் பதியப்பட்டுள்ளதாகவும் சமூக நலத்துறையின் அறிக்கை கூறுகிறது. அதன்படி, அதிகபட்சமாக, குடும்ப வன்முறை குறித்து 366 புகார்களும், பெண்கள் சொத்துரிமை குறித்து 132 புகார்களும், குடித்துவிட்டு தாக்கும் கணவன் குறித்து 127 புகார்களும், வரதட்சணை கொடுமை குறித்து 100 புகார்களும், கள்ளத்தொடர்பு குறித்து 91 புகார்களும், பாலியல் சீண்டல்கள் குறித்து 77 புகார்களும், மிரட்டல்கள் குறித்து 75 புகார்களும் பதியப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, பெண்களுக்கான உதவித்தொகை, சட்ட உதவிகள், மருத்துவ வசதிகள் குறித்த வழிகாட்டுதல்களும், வீட்டை விட்டு வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்ட பெண்களுக்கான மீட்பு மற்றும் தங்கும் வசதிக்கான ஏற்பாடுகளும், உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய முதற்கட்ட கவுன்சிலிங்கும் இந்த 181 அழைப்பு மையம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. பாதிப்பிற்குள்ளான பெண்கள் 181ஐ தொடர்பு கொண்டு புகார் அளித்ததும், அவர்களின் முகவரிக்கு, காவல்துறை அல்லது நீதிமன்ற துணையுடன் அந்த மாவட்டத்தின் சமூக பாதுகாப்பு அதிகாரி உதவிக்கு அனுப்பபப்பட்டு அந்த பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. இங்கு கொடுக்கப்படும் உளவியல் ஆலோசனைகளின் மூலம், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்ட தற்கொலைகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. 

தற்போது 11 பேருடன் இயங்கும் இந்த 181 அழைப்பு மையத்தை, விரைவில் மேலும் விரிவுபடுத்த ஆலோசனையில் உள்ளதாக சமூக நலத்துறையினர் கூறுகின்றனர். இம்மையத்தில் பணிபுரிவோர் முன்வைக்கும் பிரதான குற்றச்சாட்டு, மையத்திற்கு வரும் Prank calls  எனப்படும் குறும்பு அழைப்புகள் தான். அவ்வாறான அழைப்புகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சமூக நலத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்