எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் - நீதிபதிகள் கேள்வி

எய்ட்ஸ் கட்டுபாட்டு மையங்களில் உரிய கல்வித் தகுதியின்றி பணியாற்றுவோரை, பணிநீக்கம் செய்ய தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

Update: 2019-01-08 19:46 GMT
மதுரை அண்ணாநகரை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனை ரத்த வங்கிகளை கண்காணிக்க வேண்டும் என கூறியிருந்தார். 

மேலும் ரத்தம் கொடுப்பவர்கள், பெறுவோரின் விபரங்களை பராமரிக்கவும், லாப நோக்கத்தில் செயல்படும் ரத்த வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்யவும், உரிய கல்வித்தகுதி இல்லாத பணியாளர்களை நீக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

இந்த மனு  நீதிபதிகள் சசிதரன்,  ஆதிகேசவலு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது உரிய கல்வித்தகுதி இன்றி பணியாற்றுவோரை, பணியிலிருந்து நீக்க கோரி ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இருப்பினும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று மனுதாரர் கூறினார்.

இதையடுத்து நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என கேள்வி எழுப்பினர். பின்னர்,  தமிழக சுகாதாரத்துறை செயலர் இது குறித்து பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்