'கருக்கலைப்பு' மருத்துவரை காட்டிக் கொடுத்த காதல்ஜோடி

திருவண்ணாமலை மாவட்டத்தில் காதல் ஜோடிக்கு இடையிலான பிரச்சினையின் விளைவாக கருக்கலைப்பு செய்யும் பெண் மருத்துவர் ஒருவர் போலீசில் சிக்கியுள்ளார்.

Update: 2018-12-19 05:16 GMT
திருவண்ணாமலை மாவட்டம் போளுர் அடுத்த கடலாடியைச் சேர்ந்த ராம்ராஜ் என்பவர் தன்னை பத்து ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும் ஆனால் தற்போது தன்னை திருமணம் செய்து கொள்ள மறுப்பதாகவும் அதே பகுதியைச் சேர்ந்த சுப்ரமணி என்பவரது மகள் மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தியிடம் புகார் தெரிவித்தார். தொடக்கத்தில் இதை வெறும் காதல் பிரச்சினையாக மட்டுமே நீதிபதி பார்த்த நிலையில், அந்தப் பெண் கூறிய தகவலால், விவகாரம் திசை மாறியது.  

ராம்ராஜால் தான் மூன்றுமுறை கர்ப்பமானதாகவும், போளூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கருக்கலைப்பு செய்ததாகவும் அந்தப் பெண் சொல்ல, நீதிபதி விசாரணையை தீவிரப்படுத்தினார். முதன்மை நீதிபதி மகிழேந்தி உள்ளிட்ட 5 நீதிபதிகள் போளுரில் உள்ள சுகந்தி என்பவருக்கு சொந்தமான மருத்துவமனைக்கு திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு உரிய உபகரணங்கள் இல்லாமல் இருந்ததையும்,  முறையாக மருத்துவம் படிக்காதவர்கள் ஊழியர்களாக பணிபுரிந்து வந்ததையும் கண்டுபிடித்த நீதிபதிகள், மருத்துவர் சுகந்தியை போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து போளூர் காவல்நிலையத்தில், போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருந்த போதே சுகந்தி மயங்கி விழுந்தார். 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மீண்டும் அவரிடம் விசாரணை நடைபெற்றது. இதனிடையே, கருக்கலைப்பு செய்ததற்கான எந்தவித ஆதாரமும் இன்றி, மருத்துவர் சுகந்தி கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்