ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்
ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்திய ஆட்சிப் பணியில் பணியாற்றிய ஐராவதம் மகாதேவன் நேர்மையானவர் என்றும், உலகப் புகழ் பெற்ற தொல்லியல் அறிஞர் எனவும் புகழாரம் சூட்டி உள்ளார். 2009-ம் ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டி உள்ள முதலமைச்சர், கடின உழைப்பாளியும், அன்பாக பழகக்கூடிய பண்பாளரான அவரது மறைவு பத்திரிகைத் துறைக்கும் தொல்லியல் துறைக்கும் பேரிழப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார். ஐராவதம் மகாதேவனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், தமிழ் ஆர்வலர்கள், தொல்லியல் துறை நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபத்தை
தெரிவித்துக் கொள்வதாக இரங்கல் செய்தியில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஐராவதம் மகாதேவன் உடலுக்கு அமைச்சர் பாண்டியராஜன், திமுக தலைவர் ஸ்டாலின், வீரமணி உள்ளிட்டோரும் அஞ்சலி
மறைந்த தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் உடலுக்கு தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாண்டியராஜன், தமிழ் மொழியை அடையாளப் படுத்தியவர், ஐராவதம் மகாதேவன் என தெரிவித்தார். இதேபோல, திமுக தலைவர் ஸ்டாலின், அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன், பொன்முடி, தங்கம் தென்னரசு உள்ளிட்ட திமுகவினரும், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் ஆகியோரும் ஐராவதம் மகாதேவன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எல்லாம் எடுத்துக்காட்டாக விளங்கியவர் ஐராவதம் மகாதேவன் என்றும், தமிழுக்கு பெருமை சேர்த்தவர் எனவும் புகழாரம் சூட்டினார்.