7 பேர் கொண்ட மத்திய குழு வருகை : இன்றே ஆய்வு தொடங்க வாய்ப்பு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை 7 பேர் கொண்ட மத்திய குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர்.

Update: 2018-11-24 03:56 GMT
கடந்த வியாழக்கிழமை டெல்லியில்  பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய குழுவை உடனடியாக அனுப்பி கஜா புயல் பாதிப்பை ஆய்வு செய்து, நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதனை ஏற்று, மத்திய குழு தமிழகம் வந்துள்ளது. மத்திய உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சர்ட், மத்திய நிதித்துறை ஆலோசகர் கவுல், மத்திய வேளாண்மை துறை இயக்குனர்  வத்சலா, மத்திய ஊரக வளர்ச்சி துறை துணை செயலாளர் மானிக் சந்திரா பான்ட், மத்திய எரிசக்தி துறை தலைமை பொறியாளர் வந்தனா சிங்ஹால் ஆகிய 5 பேர் நேற்று இரவு 8.15 மணிக்கு சென்னை வந்தனர். இவர்களுடன் தமிழகத்தில் பணியாற்றும் மத்திய நீர்வள ஆதாரத்துறை இயக்குனர் ஹர்ஷா, மத்திய போக்குவரத்து துறை கண்காணிப்பு பொறியாளர் இளவரசன் ஆகிய 2 பேர் ஆய்வில் இணைந்து கொள்கின்றனர். 

மொத்தம் 7 பேர் கொண்ட மத்திய குழுவினர், இன்று காலை 9 மணிக்கு தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் வருவாய்த்துறை, நிதித்துறை, வேளாண் துறை உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர். அப்போது, புயல் பாதிப்பு குறித்த வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்களை மத்திய குழுவிடம் தமிழக அதிகாரிகள் காண்பித்து, விளக்குவார்கள். இதனைத் தொடர்ந்து, காலை 10 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மத்திய குழுவினர் சந்தித்துப் பேசுகின்றனர். 

இந்த கூட்டம் முடிந்ததும் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி செல்லும் மத்திய அதிகாரிகள், குழு குழுவாக பிரிந்து கார் மூலம், புயல் பாதிக்கப்பட்ட இடங்களை  பார்வையிடுவார்கள். 
3 நாட்கள் ஆய்வு செய்யும் மத்திய குழுவினர், வருகிற 27ஆம் தேதி மீண்டும் சென்னை வந்து, தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார்கள்.
Tags:    

மேலும் செய்திகள்