தமிழகத்தில் பரவலாக மழை : விவசாயிகள் மகிழ்ச்சி
கும்பகோணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான சுவாமிமலை, தாராசுரம், அம்மா சத்திரம், அசூர், சுந்தர பெருமாள் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு கன மழை பெய்தது.
கும்பகோணம் : 5 மணி நேரம் விடாமல் பெய்த அடைமழை
கும்பகோணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான சுவாமிமலை, தாராசுரம், அம்மா சத்திரம், அசூர், சுந்தர பெருமாள் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு கன மழை பெய்தது. சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக, விடாமல் மழை பெய்ததால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. சாலைகளில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் ஓடியது. கும்பகோணத்தில் உள்ள தீயணைப்பு துறை அலுவலகத்துக்குள் மழை தண்ணீர் புகுந்தது. இதனால், இரவில் அங்கு தங்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் அவதிப்பட்டனர்.
அரியலூர் மாவட்டத்தில் கனமழை : விவசாயிகள் மகிழ்ச்சி
அரியலூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் பரவலாக கனமழை பெய்தது. இதனால் மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவர்கள் மழையில் நனைந்தபடியே சென்றனர். இந்நிலையில், அரியலூர் மாவட்டத்தில் நேற்று மட்டும் 61 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திண்டுக்கல்லில் விட்டு விட்டு இடியுடன் கூடிய கன மழை
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் திண்டுக்கல்லில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மதியம் சுமார் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்வதால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஒடியது. மேலும் திண்டுக்கல்லை சுற்றியுள்ள சிறுமலை, சின்னாளபட்டி, தாடிக்கொம்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்தது.
விருதுநகரில் பரவலாக மழை : பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மம்சாபுரம், வன்னியம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்தது. இதனால் பள்ளிக்கு சென்ற மாணவர்கள் நனைந்த படியே வீட்டிற்கு சென்றனர். திடீரென மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.