கடலில் கச்சா எண்ணெய் கலப்பு: "மீன்வளம் பாதிக்கப்படுமோ என் மீனவர்கள் அச்சம்"
சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் மீண்டும் கடலில் கொட்டிய கச்சா எண்ணெயால், மீன்வளம் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மீனவர்கள் உள்ளனர்.
எண்ணூர் காமராஜர் துறைமுக வளாகத்தில் உள்ள சி.பி.சி.எல் நிறுவனத்திற்கு மார்ஷல் தீவைச் சேர்ந்த கோரல் ஸ்டார் கப்பல், 25 ஆயிரத்து 400 டன் கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு நவம்பர் 14-ல் வந்தது. இந்த கப்பலில் இருந்து நேற்று குழாய் மூலம் கச்சா எண்ணெய் இறக்கும் பணி நடந்த போது, திடீரென இணைப்புக் குழாய் உடைந்துள்ளது. இதில் சுமார் 2 டன் கச்சா எண்ணெய் வெளியேறி கடலில் கலந்தது. இதனை அகற்றும் பணி நடைபெற்று வரும் நிலையில், கடலில் கொட்டிய கச்சா எண்ணெய் பாதிப்பு குறித்து கண்டறிய விசாகப்பட்டினத்தில் இருந்து கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான கப்பல் உள்பட 2 கப்பல்கள் வந்து கொண்டு இருக்கிறது. கச்சா எண்ணெய் கொட்டியதால் மீன்வளம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்து உள்ளனர்.