கோயில் சொத்துக்கள் குத்தகை விவரம்..உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு...
கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களின் குத்தகை விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அறநிலையதுறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
* திருப்புகளூர் வேலக்குறிச்சி ஆதீனத்திற்கு சொந்தமான 12.5 ஏக்கர் பரப்பிலான நிலத்துக்கு நியாயமான வாடகையை நிர்ணயிக்க,வாடகை நிர்ணயக்குழுக்கு உத்தரவிடக்கோரி , ஆதீனகர்த்தா ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ பரமாச்சாரிய சுவாமிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.
* இந்த வழக்கு நீதிபதி சுப்ரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்போது, பல்வேறு கோயில்களுக்கு சொந்தமான500 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் மூன்றாவது நபரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
* இதனையடுத்து, கோயில் நிலங்களை,நில மாஃபியாக்கள், ஆக்கிரமிப்பாளர்களால் தவறாக பயன்படுத்துவதை, அறநிலையத்துறை கண்டும் காணாமல் இருப்பது வேதனை அளிப்பதாக நீதிபதி சுப்பிரமணியம் தெரிவித்தார்.
* தமிழகத்தில் அரசு நிலம், கோயில் நிலம், அறக்கட்டளை நிலம் ஆகியவை ஆக்கிரமிப்பது அதிகரித்து வருவதாகவும் நீதிபதி குறிப்பிட்டார்.
* கோயில் நலனுக்கும், பக்தர்களின் நலனுக்காகவும், கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை நல்ல உள்ளங்கள் தானமாக வழங்குகின்றனர் என்றும்,
* ஆனால் அந்த உன்னத நோக்கத்தை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் கோயில் சொத்துக்களை சம்மந்தப்பட்ட கோவில் அறங்காவலர்களே
தவறாக பயன்படுத்துவதாக நீதிபதி வேதனை தெரிவித்தார்.
* இந்த சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய அதிகாரிகள் கடமை தவறிவிட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஆணையர், இணை ஆணையர் ஆகியோர் கடமை தவறியுள்ளதாகவும் நீதிபதி சுப்பிரமணியம் குற்றம் சாட்டியுள்ளார்.
* தனக்கு கீழ் பணியாற்றக் கூடிய அதிகாரிகளை கண்காணித்து பணிகளை ஆய்வு செய்ய வேண்டிய கடமை மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான இந்துசமய அறநிலையத்துறை ஆணையருக்கு உள்ளதாகவும்,
* இனிமேலாவது அவர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உடனடி நடவடிக்கைகளில் இறங்குவார் என எதிர்பார்ப்பதாகவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
* தமிழகம் முழுவதும் அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள 36 ஆயிரம் கோயில்களின் சொத்துகள், நகைகள் உள்ளிட்டவற்றை கணக்கெடுக்க நீதிபதி சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.
* தமிழகம் முழுவதும் உள்ள கோயில்கள், அறக்கட்டளைகளுக்கு சொந்தமான சொத்துக்களின் குத்தகை விவரங்களையும், குத்தகை பாக்கிதாரர்கள், ஆக்கிரமிப்பாளர்கள் குறித்த விவரங்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
* கோயில் சொத்து ஆக்கிரமிப்பளர்களை கண்டறிந்து மூன்று மாதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதி,
* முறைகேடுகளுக்கு துணைபோகும் அதிகாரிகளுக்கு எதிராக துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
* இந்த உத்தரவுகளை அமல்படுத்தி, வரும் ஜனவரி 23-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதி சுப்ரமணியம் உத்தரவிட்டுள்ளார்.