தீபாவளி பண்டிகை : பெண்கள் விரும்பும் ஆரணி கைத்தறி புடவைகள்
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஆரணியில் கைத்தறி புடவைகளை ஏராளமானோர் ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர்.
காஞ்சிபுரம் பட்டு எந்த அளவுக்கு பெண்களிடம் பிரசித்தமோ அதே அளவுக்கு ஆரணி கைத்தறி பட்டுப்புடவைகளும் பெண்களுக்கு பிடித்தமான ஒன்று. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சுற்றியுள்ள பகுதிகளில் கைத்தறி தொழிலை நம்பி சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் பட்டுப்புடவைகள் கலை நயமிக்கதாக இருப்பதால் ஏராளமான பெண்கள் இங்கு வந்து புடவைகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
எல்லா வயதினருக்கும் ஏற்ற வகையிலான புடவைகள் இங்கு கிடைப்பதால் தங்களுக்கு பிடித்தமான உடைகளை பொறுமையாக தேடி வாங்குவதில் பெண்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆரணி பட்டு விலை குறைவு என்பதும் பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கிறது. தீபாவளி பண்டிகை மட்டுமின்றி தீபாவளிக்கு அடுத்த நாள் நோன்பு பண்டிகைக்கும் பட்டுப்புடவைகளை பெண்கள் ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர்.
விதவிதமான வண்ணங்களில் அழகிய பார்டர்கள் கொண்ட பட்டுப்புடவைகளும் கைத்தறி நெசவு முறையில் இந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் புடவைகளை தேர்ந்தெடுக்க ஏராளமான பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.