விபத்து இழப்பீடு மோசடி : வழக்கறிஞர்களுக்கு நோட்டீஸ்

விபத்து வழக்குகளில் போலி எப்.ஐ.ஆர் தயாரித்து ஒன்றுக்கும் மேற்பட்ட நீதிமன்றங்களில் இழப்பீடு பெற்ற சம்பவம் தொடர்பாக, 400-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Update: 2018-10-29 09:00 GMT
ஒரு சாலை விபத்துக்கு போலி எப்.ஐ.ஆர். மூலம் 3 நீதிமன்றங்களில் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரிய விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தில் கிளர்க்காக பணியாற்றி வந்த ஸ்டீபன் மற்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்த மோகன் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களையும் சிபிசிஐடி போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த புகார்கள் குறித்து உயர்நீதிமன்ற உத்தரவின்படி, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. 
சோழமண்டலம் காப்பீட்டு நிறுவனத்தில் நடத்தப்பட்ட விசாரணையில், சுமார் 335 வழக்குகளில் போலி ஆவணங்களுடன் இரண்டு நீதிமன்றங்களில் இழப்பீடு பெறப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 

டாட்டா இன்சூரன்ஸ் நிறுவனத்திலும் இதே போன்று 65 வழக்குகளில் போலியாக இழப்பீடுகள் கோரப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள், ஆஜரான 400-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள்  உள்ளிட்டோருக்கு  விசாரணை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

சாலை விபத்துகளில் இழப்பீடு கோரும் வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதிகளுக்கும் சந்துரு தலைமையிலான ஒரு நபர் ஆணையம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சென்னையில் அதிகமான விபத்து இழப்பீடுகள் பூந்தமல்லி நீதிமன்றத்தில் தான் கோரப்பட்டுள்ளதாகவும், அது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்