பணியிடத்தில் பாலியல் தொந்தரவு - செய்ய வேண்டியது என்ன...?

நாடு முழுவதும் மீ டூ புகார்கள் தொடர்ந்து புயலை கிளப்பி வரும் சூழலில், பணியிடத்தில் பாலியல் தொந்தரவு ஏற்பட்டால் எப்படி புகார் அளிப்பது? பணியிடத்திற்கு வெளியில் நடந்தால் என்ன செய்வது? இந்த கேள்விகளுக்கு விடை அளிக்கிறது.

Update: 2018-10-25 04:41 GMT
* கடந்த 2013 ஆம் ஆண்டு, பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. 

* விசாகா பரிந்துரைகளை ஒட்டி அமைந்துள்ள இந்த சட்டத்தின் படி, 10 பேருக்கு மேல் வேலை செய்யக்கூடிய எந்த அலுவலகத்திலும், பாலியல் தொந்தரவுகள் பற்றி புகார் அளிக்க ஒரு தனி குழு அமைக்கப்பட வேண்டும். 

* அப்படி அமைக்காத நிறுவனங்கள் மீது முதலில் அபராதம் விதிக்கவும், தொடர்ந்து மீறினால் அங்கீகாரத்தையே ரத்து செய்யவும் சட்டம் இடமளிக்கிறது. 

* அந்த அலுவலகத்தில் பணி புரியும் ஒரு மூத்த பெண் உறுப்பினர் குழுவின் தலைவராக இருப்பார். அவருடன், 2 ஊழியர்கள், அந்த  அலுவலகம் சாராத வெளிநபர் ஒருவர் குழுவில் இடம்பெற வேண்டும்.

* இதன் படி, பணியிடத்தில் பெண்களை, அனுமதியில்லாமல் தகாத முறையில் தொடுவது அல்லது தொட முயல்வது,  நேரடியாகவோ மறைமுகமாகவோ தனது பாலியல் விருப்பங்களை நிறைவேற்ற கோருதல், பாலியல் அர்த்தம் பொதிந்த வார்த்தைகள் பேசுதல், ஆபாச படங்கள் காட்டுதல், பார்க்க வற்புறுத்துதல், வார்த்தை, உடல் மொழியால் பாலியல் தொந்தரவு செய்தல், பாலியல் ஆசைகளை பூர்த்தி செய்தால் பணியில் உயர்வு தருவதாக வாக்குறுதி அளித்தல், 
பாலியல் தேவைகளை நிறைவேற்றாவிட்டால் பணியிடத்தில் பாதிப்பு ஏற்படுத்துவேன் என  மிரட்டுதல், பாலியல் தேவைகளுக்கு இசையாதவர்களை பணியிடத்தில் அவமானப்படுத்துதல் என இத்தகைய காரணங்களால் புகார் அளிக்கலாம். 

இந்த செயலில் ஈடுபடும் அலுவலக முதலாளி முதல் கீழ்நிலை ஊழியர் வரை தன்னுடன் வேலை செய்யும் எந்த நபர் தவறாக நடந்தாலும் புகார் அளிக்கலாம். 

* அலுவலக பணிக்காக வேறு இடத்திற்கு சென்றாலும், வெளியூருக்கோ வெளிநாட்டிற்கோ சென்றாலும் கூட, அங்கும் இந்த சட்டம் பொருந்தும். அலுவலக வாகனத்தில் செல்லும் போது தொந்தரவு கொடுத்தாலும் புகார் அளிக்கலாம். 

* புகார் அளித்த உடனே விசாரணை தொடங்காது. முதலில் இரு தரப்பினருக்கிடையே பேச்சுவார்த்தை நடத்த முயற்சி மேற்கொள்ளப்படும். பேச்சுவார்த்தையில் சமரச உடன்பாடு ஏற்பட்டால், வழக்கு முடித்து வைக்கப்படும். ஆனால், பணம் கொடுத்து பிரச்சனையை முடித்து வைக்க கூடாது.  

* உடன்பாடு இல்லாத பட்சத்தில், 90 நாட்களுக்குள் விசாரணை நடத்தி குழு முடிவெடுக்கும். இந்த விசாரணையின் போது ஆண், பெண் இருவரது பெயர்களும் அடையாளமும் ரகசியமாக வைக்கப்பட வேண்டும். கோரிக்கை வைக்கப்பட்டால், இருவரில் ஒருவருக்கு பணி மாறுதலும் கொடுக்கலாம். 

* பாதிக்கப்பட்ட பெண் விரும்பினால், அதிக பட்சம் 3 மாதம் வரை அவருக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கவும் இந்த சட்டத்தில் இடமுண்டு. 


* விசாரணையில் இருவருக்கும் தங்கள் தரப்பை சொல்ல சம வாய்ப்பு வழங்க வேண்டும். சாட்சிகளை அழைக்கவும், ஆவணங்கள் கோரவும், சிசிடிவி போன்ற ஆதாரங்களை திரட்டவும் குழுவிற்கு அதிகாரம் உண்டு. 

* குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அந்த அலுவலக விதிகளின் படி, பணி நீக்கம் வரையான எந்த தண்டனையும் வழங்கலாம். 

* அபராத தொகையை குற்றவாளியின் சம்பளத்தில் பிடித்தம் செய்து, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு இழப்பீடாகவும் வழங்கலாம்.

* தீவிரமான குற்றம் நடைபெற்றிருந்தால், புகாரை 7 நாட்களுக்குள் காவல்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும். 

* புகாருக்கு ஆதாரம் கிடைக்கவில்லை என்பதாலேயே பொய் புகார் என கருதப்படாது. அதே சமயம், புகார் உள்நோக்கத்துடன் அளிக்கப்பட்டது தெரிய வந்தால், புகார் அளித்த பெண் மீதும் அவருக்கு உடந்தையானவர்கள் மீதும் பணி நீக்க நடவடிக்கை எடுக்கலாம். 

 


Tags:    

மேலும் செய்திகள்