தீபாவளி பண்டிகைக்கு தயாராகும் மணப்பாறை முறுக்கு வகைகள்
தீபாவளி பண்டிகைக்காக மணப்பாறை முறுக்கு செய்வதற்கான ஆர்டர்கள் குவிந்துள்ள நிலையில், விதவிதமான முறுக்குகள் செய்வதில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
விதவிதமான ஆடை, அணிகலன்கள் இருந்தாலும் பலகாரங்களும் சேர்ந்தால் தான் பண்டிகை களைகட்டும். தீபாவளி பண்டிகையை ருசியானதாக மாற்றும் பலகாரங்களில் தனித்துவம் பெற்றிருக்கிறது மணப்பாறை முறுக்கு.
பண்டிகைகளின் போது ஸ்வீட்ஸ் வெரைட்டி எத்தனை செய்தாலும் முறுக்கு செய்யாத குடும்பங்களே இல்லை என்று தான் செல்ல வேண்டும்... பல நாட்களுக்கு முன்பாகவே அதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபடும் குடும்பங்களும் உண்டு. ஆனால் மாறி வரும் சூழல் காரணமாக கடைகளில் ஆர்டர்கள் கொடுத்து வாங்குவோரும் உண்டு. அவர்களுக்காகவே பிரத்யேகமாக பலகாரங்கள் தயாரிக்கும் பணிகளும் சுறுசுறுப்பாகவே நடக்கிறது. முறுக்கு என்றதும் நினைவுக்கு வருவது நெய் மணம் கமகமக்கும் மணப்பாறை முறுக்குகள் தான். திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள இந்த முறுக்குகளை செய்யும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இங்கு தயாரிக்கப்படும் முறுக்குகளின் சுவைக்காகவே பல மாநிலங்களில் இருந்தும் ஆர்டர்கள் கொடுக்க வியாபாரிகள் வருவதுண்டு. துபாய், கத்தார், குவைத், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அளவுக்கு மணப்பாறை முறுக்கு பிரசித்தம்...