"ஜெயலலிதா ஆட்சியில் கொண்டு வந்த கல்வி முறையில் மாற்றம்?"- கல்வித்துறை அறிவிப்பு
ஜெயலலிதா காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட முப்பருவ கல்வி முறையில் மாற்றம் செய்வதற்கு பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
* மாணவர்களின் பாடச் சுமையை குறைக்க முப்பருவ கல்வி முறை மற்றும் தொடர் மதிப்பீட்டு முறையும் ஜெயலலிதா காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
* 2012-2013 ஆம் கல்வியாண்டில், ஒன்று முதல் 8 ம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த முறையில், ஒரு கல்வி ஆண்டிற்கான பாடம் 3 பகுதிகளாக பிரித்து நடத்தப்பட்டு 3 பருவத்திற்கும் தனித்தனியாக தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. 2013-2014 ம் ஆண்டு முதல் முப்பருவக் கல்விமுறை 9-ம் வகுப்பிற்கும் விரிவு படுத்தப்பட்ட நிலையில். தற்போது 9 ஆம் வகுப்பிற்கான முப்பருவ கல்வி முறையை கைவிட பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
* பத்தாம் வகுப்பில் முப்பருவ கல்வி முறை இல்லாத நிலையில், ஒன்பதாம் வகுப்பில் மாணவர்கள் இந்த முறையில் படித்து விட்டு பத்தாம் வகுப்பு தேர்வு முறை மற்றும் கற்கின்ற விதம் அனைத்தும் மாறுபடுவதால் மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும், இதன் காரணமாக பழைய முறையையே அமல்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து உரிய முடிவை எடுக்குமாறு , மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், பள்ளி கல்வித்துறைக்கு பரிந்துரை செய்துள்ளது. பொதுக் கல்வி வாரியத்தின் கூட்டத்தில் இதுகுறித்து முடிவு எடுக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.