பத்திரங்களை பாதுகாக்க பின்பற்றப்படும் நடைமுறை என்ன? - பதிவுத்துறை ஐ.ஜி. நேரில் விளக்கம் அளிக்க உத்தரவு
பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஆவணங்களை பத்திரப்படுத்த பின்பற்றப்படும் நடைமுறைகள் குறித்து, வரும் 1-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, பதிவுத் துறை ஐ.ஜி.க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சென்னை பம்மல் பகுதி சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை வழங்க கோரி பூபதி என்பவர் தாக்கல் செய்த வழக்கில், உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் முன்பு சைதாப்பேட்டை சார் பதிவாளர் ஆஜரானார். அப்போது, ஆவணங்கள் எப்படி பாதுகாக்கப்படுகிறது என நீதிபதி எழுப்பிய கேள்விக்கு, பெரிய கவர் ஒன்றில் ஆவணங்கள் பாதுகாக்கப்படுவதாக
சார் பதிவாளர் தெரிவித்தார்.நிலங்கள் தொடர்பான 200 ஆவணங்கள் சார் பதிவாளர் அலுவலகத்தில் இல்லை என தெரியவந்துள்ளதாக குறிப்பிட்ட நீதிபதி, கவனக்குறைவாக ஆவணங்கள் வைக்கப்பட்டு, சேதமடையச் செய்தது குறித்து அதிருப்தி தெரிவித்தார்.ஆவணங்கள் பாதுகாப்பாக இல்லாத நிலையில், சொத்துக்களுக்கும் பாதுகாப்பு இல்லை எனவும், அதற்கு அதிகாரிகள் கடமையை செய்யத் தவறுவதே காரணம் எனவும் கண்டனம் தெரிவித்தார்.ஆவணங்களை பாதுகாக்க என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறித்து வரும் 1-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி பதிவுத்துறை ஐ.ஜி.க்கு உத்தரவிட்டார்.இதேபோல, லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த அறிக்கையை மேற்கோள் காட்டிய நீதிபதி, சோதனை, விசாரணை எல்லாம் வெறும் கண்துடைப்பாகவே உள்ளது எனவும், பதிவுத் துறையில் ஊழல் படிந்துள்ளதாகவும் வேதனை தெரிவித்தார்.2016 முதல் 2018 ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட சோதனைகள், கைது செய்யப்பட்ட நபர்கள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யும்படி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.