ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் : 2016-ல் இதே நாளில் அப்பலோ மருத்துவமனையில் அனுமதி...

2 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் தான் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஜெயலலிதா.

Update: 2018-09-22 17:31 GMT
* 2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று, 5-வது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார் ஜெயலலிதா.ஜெயலலிதாவும், கருணாநிதியும்  கடைசியாக போட்டியிட்ட தேர்தலாக இது அமைந்தது. 2016 செப்டம்பர் 21-ம் தேதி, கடைசியாக பங்கேற்ற சென்னை மெட்ரோ ரயில் துவக்க விழாவில், மிகவும் சோர்வுடன்  காணப்பட்டார், ஜெயலலிதா.

* இதை தொடர்ந்து, அடுத்த நாளான செப்டம்பர் 22-ம் தேதி இரவு, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பலோ மருத்துவமனையில் அவர்  அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு இருப்பதாகவும், சிகிச்சைக்கு பிறகு உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவித்தது, அப்பலோ மருத்துவமனை.

* அடுத்தடுத்த நாட்களில் வெளியான அறிவிப்புகளிலும், ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும், அவர் விரும்பும் போது வீடு திரும்பலாம் எனவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு, லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே, சிங்கப்பூர் பிசியோதெரபிஸ்டுகள், டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் ஆகியோர் சிகிச்சை அளிப்பதாக கூறப்பட்டது.

* முதலமைச்சரின் பணிகளை, ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்து கவனிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. 2016 நவம்பர் 13-ம் தேதி, தான் மறுபிறவு எடுத்திருப்பதாகவும், வழக்கமாக பணிகளை விரைவில் தொடருவேன் எனவும் ஜெயலலிதா, தான் கையெழுத்திட்ட கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

* ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து தமிழக ஆளுநர், தேசிய மற்றும் மாநில தலைவர்கள் பலர் மருத்துவமனையில் நலம் விசாரித்து வந்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா, 2016 நவம்பர் 19-ம் தேதி, தனி அறைக்கு மாற்றப்பட்டார். வென்டிலேட்டர் உதவி இல்லாமல் ஜெயலலிதா சுவாசிப்பதாகவும், மெல்ல பேசுவதாகவும் அப்பலோ தரப்பில் கூறப்பட்டது.

* இந்தநிலையில், 2016 டிசம்பர் 4-ம் தேதி ஜெயலலிதாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.  எக்மோ உள்ளிட்ட பல்வேறு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது. இருந்த போதிலும், 75 நாட்களாக அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி, 2016 டிசம்பர் 5-ஆம் தேதி, இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா காலமானார். 

* இந்தநிலையில், ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகார்களை தொடர்ந்து, இதுகுறித்து விசாரிக்க தமிழக அரசு விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்தது. ஆறுமுகசாமி தலைமையிலான அந்த ஆணையம், பல்வேறு தரப்பினரிடமும் விசாரணையை முடித்து, அக்டோபர் 24ந் தேதிக்குள் அறிக்கையை, அரசிடம் சமர்ப்பிக்க தீவிரம் காட்டி வருகிறது.
Tags:    

மேலும் செய்திகள்