அதிர்ஷ்டம் என நம்பி குள்ளநரியை வளர்த்தவர் கைது...
சிவகாசி அருகே அதிர்ஷ்டம் என நினைத்து குள்ளநரியை வளர்த்து வந்த பட்டாசு ஆலை உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்
நரி முகத்தில் தினமும் விழித்தாலோ, அல்லது அது ஊளையிடுவதைக் கேட்டோலோ, அதிர்ஷ்டம் வரும் என பலரும் நம்பிக் கொண்டிருக்கின்றனர். சிவகாசியைச் சேர்ந்த ரத்தினசாமி என்பவரும், இதே நம்பிக்கையை கொண்டிருந்ததால், தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
சிவகாசி அருகேயுள்ள காக்கிநாடன்பட்டியில் பட்டாசு ஆலை நடத்தி வரும் ரத்தினசாமி, காட்டில் சுற்றித்திரிந்த குள்ளநரி ஒன்றை பிடித்துவந்து தனது ஆலையில் அடைத்து வளர்த்து வந்துள்ளார். தினமும் அந்த குள்ளநரியின் முகத்தில் விழிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்தநிலையில் ரத்தினசாமியின் ஆலையில் இருந்து அடிக்கடி நரி ஊளையிடும் சத்தம் கேட்கவே, அக்கம்பக்கத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.
இதையடுத்து ஆலையில் சோதனைநடத்திய போலீசார், உள்ளே நரி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, குள்ளநரி மீட்கப்பட்டது. கடந்த ஏழு நாட்களாக ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகத்தில் வைக்கப்பட்டிருந்த குள்ளநரி, நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் வனப்பகுதியில் விடப்பட்டது. மூட நம்பிக்கையை நம்பி குள்ளநரியை வளர்த்து வந்த ரத்தினசாமி மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.