ஒசூரில் காட்சி தரும் கல்யாண காமாட்சி அம்மன்...
ஒசூரில் கல்யாண காமாட்சி அம்மனாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அம்பிகை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...
ஒசூரின் மையப் பகுதியில் இருக்கிறது கல்யாண காமாட்சி அம்மன் திருக்கோயில்... அம்பாளின் இடது புறத்தில் சரஸ்வதியும், வலது புறத்தில் லட்சுமியும் வீற்றிருக்க முப்பெருந்தேவியாக, அகில உலகத்தை காக்கும் அம்பாளாக காட்சி தருகிறாள் காமாட்சி...சிவபெருமானின் கண்களை விளையாட்டாக பார்வதி தேவி மூட உலகமே இருண்டு போனதாம்.. இதனால் கோபமடைந்த ஈசன், பார்வதி தேவியை பூலோகத்திற்கு அனுப்பி தவம் புரிய வேண்டும் என கட்டளையிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து , மாங்காடு வந்த பார்வதி தேவி, சிவனை எண்ணி தவமிருக்கிறாள்.. தன்னில் பாதியான உமையாளை சோதிக்க விரும்பிய ஈசன், பெரு வெள்ளத்தை ஏற்படுத்த, மணலால் செய்த சிவலிங்கத்தை அம்பிகை அணைத்தபடி ஈசனுடன் மீண்டும் இணைவதாக வரலாறு கூறுகிறது... பார்வதி தேவியானவள் பூலோகத்திற்கு வந்து காமாட்சி தேவியாக உருவெடுத்த கதை இதுதான்...ஒசூர் கல்யாண காமாட்சியை தேடி வரும் பக்தர்கள் ஏராளம்.. காரணம் தன்னை நம்பி வரும் பக்தர்களை மனம் குளிர வைத்து அனுப்புவதில் காமாட்சிக்கு அப்படி ஒரு ப்ரியம்... திருமணத் தடை இருப்பவர்கள் அம்பாளுக்கு ஏலக்காய் மாலை படைத்து வழிபட்டால் தடைகள் நீங்கி வழிபிறக்கிறது என்கிறார்கள் அம்மனால் பலன் பெற்ற பக்தர்கள்... குழந்தை இல்லாதவர்கள் இங்கு வந்து அம்பாளுக்கு படைக்கப்பட்ட எலுமிச்சம்பழங்களை வாங்கிச் சென்று பயபக்தியோடு வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கிறதாம்... எங்கும் இல்லாத சிறப்பாக இங்கு அம்பாளுக்கு குழந்தைகள் அபிஷேகம் செய்கிறார்கள்... குழந்தைகளை நேசிக்கும் அம்பிகை என்பதை உணர்த்தும் வகையில் இந்த அபிஷேகம் நடக்கிறது...
ஆடி மாதத்தில் அம்பாளுக்கு நடக்கும் திருக்கல்யாணம், நவராத்திரி, பங்குனி உத்திரம் போன்ற விழா நாட்களில் அலங்கார வடிவில் காட்சி தரும் உமையாளை பார்க்க கண்கள் இரண்டு போதாது... காமாட்சி அம்மனின் அருளை உணர்ந்த பக்தர்கள் பல நாடுகளில் இருந்தும் தேடி வருவதே அம்பாளின் பெருமையை உலகறிய செய்கிறது...