நெல்லையப்பர் கோவில் யானை 150 கிலோ உடல் எடை குறைப்பு
நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி, கட்டுப்பாடான உணவுமுறையை பின்பற்றி 150 கிலோ உடல் எடையை குறைத்துள்ளது.
தினமும் காலையில் 7 முதல் 8 கிலோ மீட்டர் வரை நடைபயிற்சி. காலையில் பசும்புல், சுக்கு, மிளகு, பெருங்காயம் அஷ்டசூரணம், மஞ்சள், உப்பு சேர்த்து 5 கிலோ பச்சரிசி சாதம்.
இது தான் நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதியின் டயட். கடந்த 1985 ஆம் ஆண்டு கேரளாவில் இருந்து நெல்லையப்பர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்ட காந்திமதி யானைக்கு தற்போது வயது 45...ஆனால் அதன் எடையோ 4ஆயிரத்து 550 கிலோ. இதனால் நடப்பதில் சிரமப்பட்டு வந்தது காந்திமதி.இதனை பார்த்த கோவில் நிர்வாகம் அதன் எடையை குறைக்க முடிவு செய்து அதற்கான நடவடிக்கையிலும் இறங்கியது.
இடைவிடாத நடைப்பயிற்சி, மருத்துவர் அட்டவணைப்படி உணவு, இரவில் கோரைப்புல், பசுந்தீவனம் என பல்வேறு நடவடிக்கைகளால் காந்திமதி யானையின் உடல் எடை 150 கிலோ வரை குறைந்துள்ளது. கோவில் திருவிழாக்களில் தற்போது காந்திமதி யானை எளிதாக, அழகுகாக நடந்து செல்வது கண்கொள்ளா காட்சியாக உள்ளதாக கூறுகின்றனர் பக்தர்கள்.
பிரசித்த பெற்ற சிவாலய தலமான நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி யானை, பக்தர்களின் அன்புக்குரியதாக இருந்து வருகிறது. காந்திமதியின் சேட்டைகளை ரசிக்க தனி கூட்டமே உள்ள நிலையில், கட்டுப்பாடான உணவுமுறையை பின்பற்றி எடை குறைத்திருப்பது பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.