ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசின் அரசாணைக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதிக்க மறுப்பு...
ஆலை பராமரிப்பு பணிக்கு அனுமதிக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கை நிராகரிப்பு.
தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்க கோரி, வேதாந்தா குழுமம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, நீதிபதி ஏ.கே.கோயல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி, 5 உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும், வேதாந்தா குழுமம் தரப்பில் கோரப்பட்டது. இதற்கு தமிழக அரசு சார்பில் கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. மேலும், ஆலையில் சல்ப்ஃயூரிக் ஆசிட், உள்ளிட்ட ரசாயனங்கள் உள்ளதாகவும், அதனை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் வேதாந்தா குழுமம் சார்பில் வாதிடப்பட்டது. இதற்கும் தமிழக அரசு தரப்பு கடும் ஆட்சேபம் தெரிவித்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அரசின் உத்தரவுக்கு தற்போது இடைக்கால தடை விதிக்க முடியாது என கூறி, வருகிற ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.