சிறுமியின் பின்னணி தெரிந்த பின்னரே குற்றம் நடந்துள்ளது - தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்

சென்னையில் சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில், சிறுமியின் பின்னணி குறித்து முழுமையாக அறிந்து கொண்ட குற்றவாளிகள் இதில் துணிந்து ஈடுபட்டதாக தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

Update: 2018-07-20 05:58 GMT
சென்னை அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் 12 வயதான மாற்றுத் திறனாளி சிறுமியை 17 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை அதிகரித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக  தந்தி செய்தியாளரிடம் பேசிய ஆணையத்தின் உறுப்பினர் ராமலிங்கம், சிறுமிக்கு நன்கு அறிமுகமான நபரே இந்த குற்றத்தின் பின்னணியில் இருப்பது வேதனையளிப்பதாக கூறியுள்ளார். சிறுமியின் உடல்நிலை மற்றும் குடும்ப பின்னணி இவற்றை எல்லாம் தெரிந்து கொண்ட பின்னரே இந்த குற்றச் செயல் நடந்துள்ளதாகவும் ராமலிங்கம் தெரிவித்துள்ளார். 

இந்த குற்றச் சம்பவத்திற்கு மற்றொரு காரணம் தீவுகள் போல காட்சியளிக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள்... அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது என்பதை கூட தெரிந்து கொள்ள முடியாத வாழ்க்கையை பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதும் இங்கு வேதனைக்குரியது... அடுக்குமாடி குடியிருப்புகளில் அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை ஒன்று கூடி பேசுவதன் மூலம் இதுபோன்ற குற்றங்களை தடுக்க முடியும் என்கிறார் ராமலிங்கம்... என்னதான் தெரிந்த நபர்களாக இருந்தாலும் அவர்கள் மீதும், குழந்தைகளின் நடவடிக்கைகளையும் பெற்றோர் கண்காணிக்க வேண்டியதும் அவசியம். குழந்தைகளிடம் மனம் விட்டு பேசுவதாலும், அவர்களுடன் அதிக நேரத்தை செலவிடுவதாலும் பாலியல் குற்றங்களை தடுக்க முடியும். 

எதிர்கால நம்பிக்கையை குழந்தைகள் மீது வைத்து செயல்படும் பெற்றோர், அவர்களை சார்ந்து இயங்குவோரையும் கண்காணிக்க வேண்டும். குற்றவாளிகள் உருவாக சந்தர்ப்பத்தை தராமல் அவர்களிடம் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் பொறுப்பு நம் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது... 


Tags:    

மேலும் செய்திகள்