நீட் - பூஜ்யம் எடுத்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடம்
நீட் தேர்வில் பூஜ்யம் மதிப்பெண் எடுத்த மாணவர்கள் 400 பேர், கடந்த ஆண்டில் தனியார் நிகர்நிலை மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.
2017-ம் ஆண்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்கள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், ஆயிரத்து 990 பேர் நீட் மொத்த மதிப்பெண்ணான 720-ல் 150-க்கும் குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்கள் என தெரிய வந்துள்ளது. 530 மாணவ, மாணவிகள் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியியல் பாடங்களில் பூஜ்யம் அல்லது நெகட்டிவ் மதிப்பெண்கள் பெற்றவர்கள் என்றும், 110 பேர் பூஜ்யம் மதிப்பெண்கள் மட்டுமே எடுத்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. இதுபோல, குறைந்த மதிப்பெண் எடுத்த 507 பேர் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். ஆண்டுக்கு இவர்கள் 17 லட்சம் ரூபாய் கல்விக் கட்டணம் செலுத்தி வருகின்றனர்.
அதே நேரத்தில், நீட்தேர்வில் உயர்ந்த மதிப்பெண் எடுத்தும், போதிய பண வசதி இல்லாததால், தங்கள் இடத்தை விட்டுக் கொடுக்கும் நிலையில் ஏழை மாணவர்கள் இருப்பது, ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதற்கிடையே, தமிழகத்தில் இதுபோன்று மாணவர்களை சேர்க்கவில்லை என மருத்துவ கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.