பாறையைத் தட்டினால் வெண்கல ஓசை - ஆன்மீகவாதிகள் குவியும் அமானுஷ்ய மலை
பாறையை தட்டினால் வெண்கல ஒசை.. சமூக வலைதளங்களில் பரவும் செய்தி உண்மையா..? அதிசய பாறை பற்றிய அலசல்..
வேலூர் மாவட்டம் காஞ்சகிரி என்ற மலையில், உள்ள மணிப்பாறை என்ற பாறையை தட்டினால், வெண்கல மணியோசை வருவதாக சமூக வலைதளங்களில் பல நாட்களாக ஒரு செய்தி பரவி வந்தது...
பலரும் அதனை வதந்தி என கூறி வந்த நிலையில், இந்த செய்தி குறித்து மக்களுக்கு உண்மையை தெரிவிக்கும் முயற்சியாக காஞ்சகிரி மலைக்கு பயணித்தோம்...
மலையடிவாரத்தில் ஏறும்போதே, எங்கு பார்த்தாலும் பக்தர்கள், யாகம் செய்துகொண்டிருந்த சிவனடியார்கள் என ஆன்மீக தளமாகவே காட்சியளித்தது காஞ்சகிரி மலை...
மலையில் மீது ஏறும்போதே மக்களிடம் மலை பற்றி கேட்க, அவர்கள் கூறிய பல செய்திகள், நமது ஆர்வத்தை அதிகப்படுத்தின...
மலையில் சிவனை காண வேண்டி பல நாட்களாக தவம் செய்துகொண்டிருந்த கஞ்சன் என்ற முனிவர், சிவனை காண முடியாத விரக்தியில், சிவனுக்கு எதிரியாக மாறுகிறார். மலைக்கு சிவனை பூஜிக்க வரும் பக்தர்களை தாக்கி திருப்பி அனுப்புகிறார். இதனால் கடும் சினம்கொண்ட சிவன் நந்தியை அனுப்பி கஞ்சனை வதம் செய்கிறார். சிதறிய கஞ்சனது உடல் பாகங்கள் விழுந்த இடங்கள் அனைத்தும் ஊர் பெயர்களாகின. இவை தான் இப்பகுதி மக்கள் மலை குறித்து கூறும் வரலாறு...
இவர்கள் கூறும் வரலாற்றிற்கு சான்றாக இங்குள்ள ஊர்களின் பெயர்கள் உடல்பாகங்களை குறிப்பதாக கூறுகின்றனர். அதாவது, கஞ்சனின் சிரசு விழுந்த பகுதி சீக்கிராஜபுரம் , வலது கால் விழுந்த பகுதி வடகால், இடது கால் விழுந்த பகுதி தேங்கால், என இன்று வரை அழைக்கப்பட்டு வருகிறது.
சமூக வலைதளங்களில் பரவிய மணிப்பாறை தான், கஞ்சனின் மார்பு விழுந்த பகுதியாக கூறப்படுகிறது. இதனால் தான் இந்த மணிப்பாறையில் வெண்கல மணியோசை கேட்கிறது என்கின்றனர்..
அவர்கள் கூறிய வரலாற்றில் சிறிய லாஜிக் இருப்பதாக தோன்றினாலும்... பாறையில் மணியோசை என்பதை நம்ப முடியாத ஆச்சர்யத்துடனே மணிப்பாறை நோக்கி சென்றோம்...
எங்களின் சந்தேக கண்களை அறிந்த அப்பகுதி மக்கள், செய்முறை விளக்கமாகவே மணிப்பாறையில் இருந்து வெண்கல மணியோசையை வரவைத்து எங்களை வியக்க வைத்தனர்.
ஆம்... மற்ற பாறைகளில் கல்லால் தட்டினால், பாறை சத்தமே வருகிறது... ஆனால், மணிப்பாறையில் தட்டும் போது, வெண்கல ஓசையை தெளிவாக கேட்க முடிகிறது...
இது எப்படி சாத்தியம், இது உண்மையில் பாறை தானா என்ற கேள்விகளுடன், பாறையை பல முறை சுற்றி பார்த்துவிட்டோம்...
அமானுஷ்யம் நிறைந்த இப்பகுதிக்கு இத்தனை சிவனடியார்களும் பக்தர்களும் படையெடுப்பதில் ஆச்சர்யமில்லை என மனதில் அசைபோட்டவாறு திரும்பி வந்தோம்...