ஜெயலலிதாவை சசிகலா, சிவகுமார் மட்டுமே பார்த்தனர் - செவிலியர் பரபரப்பு வாக்குமூலம்
அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை, சசிகலா, மருத்துவர் சிவக்குமார் தவிர வேறு யாரும் பார்க்கவில்லை என ஆறுமுகசாமி ஆணையத்தில் செவிலியர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இன்று ஆஜரான அப்பல்லோ மருத்துவர் ஷில்பா, ஆரம்பத்தில் இருந்தே அபாயகரமான கட்டத்தில் இருந்த ஜெயலலிதா, தன்னுடைய இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருந்தவர் என்று தான் எடுத்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இதைதொடர்ந்து, ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்த அப்பல்லோ செவிலியர் ஹெலனா, ஜெயலலிதாவை சசிகலா மற்றும் மருத்துவர் சிவக்குமாரை தவிர கண்ணாடி வழியாக கூட யாரும் பார்க்கவில்லை என தெரிவித்தார்.
ஜெயலலிதாவுக்கு இனிப்பு எதுவும் வழங்கவில்லை என்றும், பழங்கள் எதையும் அவர் எடுத்துக் கொள்ளவில்லை எனவும் கூறினார். இனிப்பு சாப்பிட்டதாக அப்பலோ அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதை சுட்டிக்காட்டி ஆணைய வழக்கறிஞர்கள் கேட்டதற்கு, இனிப்பு, பழங்களை ஜெயலலிதா சாப்பிடவில்லை என செவிலியர் உறுதியாக கூறினார்.
குறிப்பாக டிசம்பர் 4-ம் தேதி, ஜெயலலிதா உணவு எடுத்து கொண்டதாக அப்பல்லோ மருத்துவர் ரமா கூறியிருப்பது தொடர்பாக கேட்ட போது, உணவு வழங்குவது செவிலியர் பொறுப்பு, ஆனால், ஜெயலலிதா உணவை எடுத்துக் கொள்ளவில்லை என கூறியுள்ளார்.
அப்பலோவை சேர்ந்த மருத்துவர் மற்றும் செவிலியர், அடுத்தடுத்த நாட்களில் தந்த முரணான வாக்குமூலத்தால், ஆணைய தரப்பு அடுத்தகட்டமாக டயட்டீஷியனிடம் விசாரணை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.