அந்த ஒரு செயல் போதும்.. ரெய்னா என்றென்றும் தோனி ரசிகர்கள் இதயத்தில் இருப்பார்..!

Update: 2023-11-27 11:03 GMT

சில வீரர்கள் அணியில் இருந்தாலே போதும்... ஆன் தி ஃபீல்டிலும் சரி... ஆஃப் தி ஃபீல்டிலும் சரி... அப்படி ஓர் ஆரோக்கியமான சூழல் நிலவும்... அப்படிப்பட்ட வீரர்கள் களத்தில் கலகலப்பை ஏற்படுத்துவார்கள்... தனது வெற்றியைக் காட்டிலும் சக வீரர்களின் வெற்றியை அவர்கள் அதிகம் கொண்டாடுவார்கள்... அப்படிப்பட்ட ஒரு டீம் மேன் தான் சுரேஷ் குமார் ரெய்னா...

இந்திய அணிக்காக பலமுறை இக்கட்டான சூழலில் விளையாடி வெற்றி தேடித்தந்தவர் ரெய்னா. 2005ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரெய்னா அறிமுகமானார். 2006ம் ஆண்டு 20வது வயதில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் 3 அரைசதம் அடித்து பிரபலமானார். காயங்களுக்குப் பிறகு 2008ம் ஆண்டு மீண்டும் இந்திய அணிக்கு திரும்பிய ரெய்னா, ஆசிய கோப்பை தொடரில் 2 சதங்கள் அடித்து அணியில் நீங்கா இடம்பிடித்தார்.

டி20 உலகக்கோப்பையில் சதம் அடித்த முதல் இந்திய வீரர், 3 விதமான கிரிக்கெட்டில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பல்வேறு சாதனைக்கு சொந்தக்காரர் ரெய்னா....

குறிப்பாக 2011ம் ஆண்டு உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான நாக்-அவுட் சுற்றுகளில் ரெய்னாவின் பங்களிப்பு ஈடு இணையற்றது...

இந்தியன் பிரிமியர் லீக் தொடர் மூலம் ரெய்னா மீதான அன்பு சென்னை ரசிகர்களுக்கு அதிகமானது. ரசிகர்களால் சின்ன தல என செல்லமாக அழைக்கப்படும் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதுகெலும்பு....

2014ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் நாக் அவுட் சுற்றில் பஞ்சாப் அணிக்கு எதிராக ஆடிய அசுரத்தனமான ஆட்டத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறக்கமுடியாது....

பீல்டிங்கில் ரெய்னா ஈடு இணையற்றவர்... களத்தில் அநாயசமாக பந்தை அவர் தடுப்பது ரசிகர்களுக்கு புல்லரிப்பை ஏற்படுத்தும்... இந்தியாவின் ஜான்டி ரோட்ஸ் என்றே ரெய்னாவைச் சொல்லலாம்...

தேவைப்படும் சமயத்தில் விக்கெட் வீழ்த்தும் தோனியின் துருப்புச் சீட்டாக ரெய்னா திகழ்ந்தார். ரெய்னாவின் விக்கெட்டுகள் பலமுறை ஆட்டத்தின் போக்கையே மாற்றியுள்ளன.

தோனியின் உற்ற நண்பனான ரெய்னா, சர்வதேச போட்டிகளில் தோனி ஓய்வு பெற்ற தினமே தனது ஓய்வு முடிவையும் அறிவித்தார். சின்ன தல, கிரிக்கெட் ஜென்டில்மேன் என ரசிகர்களின் இதயங்களில் அரியாசனமிட்டு அமர்ந்திருக்கும் ரெய்னாவை கிரிக்கெட் உலகம் என்றென்றும் கொண்டாடும்...

Tags:    

மேலும் செய்திகள்