குரூப் டி பிரிவில் டல்லாஸ் நகரில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை விக்கெட்டுகளை இழந்து திணறியது. அதிகபட்சமாக தொடக்க வீரர் நிஷாங்கா 47 ரன்கள் எடுக்க, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு இலங்கை124 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து 125 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய வங்கதேச வீரர்களும், ரன் சேர்க்க முடியாமல் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். டாப்-ஆர்டர் பேட்டர்கள் சொற்ப ரன்களுக்கு வெளியேற லிட்டன் தாஸ் 36 ரன்கள் எடுத்தார். தவுகித் ஹிர்தாய் 20 பந்துகளில் 40 ரன்கள் அடித்து திருப்புமுனை தந்தார். எனினும் வங்கதேசம் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் ஆட்டம் பரபரப்பானது. களத்தில் கடைசிவரை நின்ற மகமதுல்லாவின் பங்களிப்பால் 19வது ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்த வங்கதேசம், 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.