உலக கோப்பை கால்பந்து : ஜெயிக்கப்போவது யாரு?
உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டியில், வருகிற 15- ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, பிரான்ஸ் அணியை, குரோஷியா எதிர்கொள்கிறது. 3- வது இடத்தை முடிவு செய்யும் போட்டியில், பெல்ஜியம் - இங்கிலாந்து அணிகள், வருகிற சனிக்கிழமை மோதுகின்றன.
உலக கோப்பை கால்பந்து திருவிழா, நிறைவு கட்டத்தை எட்டி விட்டது. இந்திய நேரப்படி, நேற்றிரவு 11.30 மணிக்கு துவங்கிய 2 - வது அரை இறுதிப்போட்டியில், இங்கிலாந்து அணியை குரோஷியா எதிர் கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில், 2 க்கு 1 என்ற கோல் கணக்கில், குரோஷியா வெற்றி பெற்றது.
உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிச்சுற்றுக்குள் குரோஷியா நுழைந்திருப்பது இதுவே முதன்முறை. எனவே, அந்நாட்டு ரசிகர்கள், உற்சாகத்தில் மூழ்கியுள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி, வருகிற 15 - ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாஸ்கோ நகரில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி, இரவு 8.30 மணிக்கு துவங்கும் இந்த போட்டியில், பிரான்ஸ் அணியுடன் குரோஷியா மோதுகிறது.
முன்னதாக, வருகிற 14- ம் தேதி சனிக்கிழமை 3 - வது இடத்திற்கான போட்டியில், பெல்ஜியம் - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில், இந்திய நேரப்படி, இரவு 7.30 மணிக்கு துவங்கும்.
எனவே, இவ்விரு போட்டிகளையும் காண, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான கால்பந்து ரசிகர்கள், ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.