அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட, தனியார் கட்டுமான நிறுவனத்திடம் 28 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் நடந்துள்ள சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள், வைத்திலிங்கம் அவரது மகன் மற்றும் உறவினர்கள் வீடுகள், தனியார் கட்டுமான நிறுவன அலுவலகங்கள் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் சிஎம்டிஏ அலுவலகம் மற்றும் தனியார் கட்டுமான நிறுவன நிர்வாகி வீடுகளில் நடந்த சோதனை நிறைவடைந்துள்ளது. மேலும் சில இடங்களில் 2 வது நாளாக இன்றும் சோதனை நடைபெற்று வருகிறது. சிஎம்டிஏ அலுவலகத்தில் நடந்த சோதனையில் திட்ட அனுமதி வழங்கப்பட்ட சில முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.