உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹாத்ரஸ் பகுதியில் கடந்த இரண்டாம் தேதி நடைபெற்ற ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில், திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு காரணமான சூரஜ் பால் எனப்படும் போலே பாபாவை காவல்துறையினர் தீவிரமாக தேடி வரும் நிலையில், அவர் தலைமறைவாகி விட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், இந்த
சம்பவம் தொடர்பாக முதன்முறையாக கருத்து தெரிவித்துள்ள போலே பாபா, ஜூலை இரண்டாம் தேதி நடைபெற்ற சம்பவம் குறித்து தான் மிகுந்த வருத்தம் அடைந்து இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த வலியை தாங்கிக் கொள்ளும் மன வலிமையை இறைவன் வழங்குவார் என தெரிவித்துள்ள அவர் அரசு மற்றும்
நிர்வாகத்தின் மீது முழு நம்பிக்கை வைக்குமாறு குறிப்பிட்டுள்ளார். ஆன்மீக சொற்பொழிவில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியவர்கள் தப்பிக்க முடியாது என தான் உறுதியளிப்பதாக குறிப்பிட்டுள்ள அவர்
உயிரிழந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கும்படி எனது குழுவின் உறுப்பினர்களை கேட்டுக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.