பகிரங்கமான மன்னிப்பு கேட்ட `காங்கிரஸ்' - காரணம்..?
ஜி-7 கூட்டத்திற்காக இத்தாலி சென்ற பிரதமர் மோடி போப் ஆண்டவரை சந்தித்தார். இதுதொடர்பான புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கேரள காங்கிரஸ், இறுதியாக போப்பிற்கு கடவுளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துவிட்டது என கிண்டல் அடித்திருந்தது. தேர்தல் பிரசாரத்தின் போது தன்னை கடவுள் அனுப்பியதாக மோடி சொன்னதை வைத்து காங்கிரஸ் இந்த பதிவை போட்டியிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கேரள பாஜக தலைவர் சுரேந்திரன், தேசப்பற்று கொண்ட தலைவர்களுக்கு எதிராக இழிவான மற்றும் அவமானகரமான உள்ளடக்கத்தை காங்கிரஸ் தொடர்ந்து வெளியிடுவதாக விமர்சனம் செய்தார். காங்கிரஸ் கட்சி கிறிஸ்தவர்களை அவமதித்துவிட்டதாகவும் பாஜக தரப்பில் எக்ஸ் தளத்தில் கண்டனங்கள் பெருகியது. ஆனால்... தாம் சாதாரண மனிதர் அல்ல என்று மோடி சொன்னதை கேலி செய்யும் விதமாகவே பதிவு இருந்ததாக கேரள காங்கிரசை சேர்ந்த பல்ராம் தெரிவித்தார். இருப்பினும் எதிர்ப்புகள் தொடர பதிவை நீக்கிய கேரள காங்கிரஸ், பதிவு கிறிஸ்தவர்கள் உணர்வுகளை புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கோருவதாக கேட்டுக்கொண்டுள்ளது.