மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து மக்களிடம் சந்தேகத்தை உருவாக்கியதற்காக இந்திய கூட்டணியை சேர்ந்த ஒவ்வொரு தலைவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று, பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
பீகார் மாநிலம் அராரிரியா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,
இந்தியாவின் ஜனநாயகத்தையும் தேர்தல் நடைமுறைகளையும் தேர்தலில் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பங்களையும் ஒட்டுமொத்த உலகமே பாராட்டிக் கொண்டிருக்கும் நிலையில் இந்திய கூட்டணியை சேர்ந்த தலைவர்கள் தங்களின் சுயநல நோக்கங்களுக்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அவதூறு செய்வதில் மும்முரமாக ஈடுபட்டிருந்ததாக குற்றம் சாட்டினார். வாக்கு சீட்டு அடிப்படையிலான பழைய வாக்களிப்பு முறையை மீண்டும் கொண்டுவர முடியாது என உச்ச நீதிமன்றம் இன்று வலிமையான தீர்ப்பை வழங்கியிருப்பதாக குறிப்பிட்ட பிரதமர் வாக்குச்சீட்டு பெட்டிகளை கொள்ளையடிக்க நினைத்தவர்களின் கனவுகள் தகர்ந்து விட்டதாக கூறினார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து மக்களிடம் சந்தேகத்தை உருவாக்கியதற்காக இந்தியா கூட்டணி தலைவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.