100க்கு வந்த போன்.. மின்னல் வேகத்தில் சென்ற போலீஸ்.. ஸ்பாட்டிற்கு போன பிறகு தெரிந்த உண்மை
காரைக்காலை சேர்ந்த ஆட்டு வியாபாரி தன்னை கடத்தியதாக போலியாக நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்தவர் கோபி. இவர் ஆடுகளை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில், கடந்த ஆண்டு பக்ரீத் பண்டிகையின் போது, பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த கோவிந்தசாமி என்பவரிடம் நான்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆடுகளை வாங்கிவிட்டு, அதற்கான பணத்தை தராமல் இழுக்கடித்துள்ளார். இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில், கோபி மீண்டும் கோவிந்தசாமியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். 1 லட்சத்து 50 ஆயிரம் பணம் அனுப்பி வைப்பதாகவும், அதற்கு ஈடான ஆடுகளை வாங்கித் தரும்படியும், ஆடுகள் விற்பனையானதும், பழைய பாக்கீகளையும் சேர்த்து தந்துவிடுவதாக கோபி பேசியுள்ளார். இந்த நிலையில், ஆடுகளை வாங்க வந்த கோபியை, கோவிந்தசாமியும், ஊர்க்காரர்களும் சிறைபிடித்தனர். நான்கு லட்சம் பணத்தை திருப்பி தந்தால் விடுவிப்பதாக கூறியுள்ளனர். அதிர்ச்சியான கோபி, காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து நான்கு லட்சம் பணம் கேட்டு தன்னை கடத்திவிட்டதாக தெரிவித்துள்ளார். உடனடியாக களத்தில் இறங்கிய போலீஸ், கோபியை மீட்க சென்ற போது உண்மை நிலவரம் தெரியவந்தது. கோபியை விடுவித்த போலீசார், கோவிந்தசாமிக்கு தர வேண்டிய பணத்தை ஒரு மாத காலத்திற்குள் தர வேண்டும் என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.