மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்தபோது, கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற மேற்கொண்ட நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் தெரிவிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக, எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், நெருக்கடிக் காலத்தில் பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வியை, மாநிலப் பட்டியலுக்கு மாற்ற மத்திய அரசு தயாரா என்று முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசில் அங்கம் வகிக்கும்போதெல்லாம், திமுகவுக்கு இந்த கோரிக்கைகள் நினைவுக்கு வராதது ஆச்சரியம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்தபோது, கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற முன்னாள் முதல்வர் கருணாநிதி மேற்கொண்ட ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக மக்களுக்குச் சொல்வாரா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வருவதாக கடந்த 2006-ஆம் ஆண்டு தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை, மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் அதிகராம் மிக்க கட்சியாக இருந்தும், திமுக ஏன் நிறைவேற்றவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.