வருவாய்த்துறை சார்பில் வழங்கபடும் 26 வகையான சான்றிதழ்கள் மற்றும் பட்டா மாறுதல் கோரும் மனுக்கள் மீது அதிகபட்சமாக 16 நாட்களில் முடிவெடுக்க வேண்டும் என ஆணையிட்டது குறித்து பாராட்டிய அவர், அத்தியாவசிய சான்றிதழ்கள் பெற கையூட்டு வழங்க வேண்டியிருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார். பொதுமக்களுக்கான சேவைகள் 16 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பியுள்ள தமிழக அரசு, அதையே பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டமாக இயற்றுவதற்கு என்ன தடை? என கேள்வி எழுப்பியுள்ளார். பொதுச்சேவை பெறும் உரிமைச்சட்டத்தின் படி, குறித்த காலத்தில் அரசின் சேவை கிடைக்காத மக்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கவும், சேவை வழங்காத அதிகாரிக்கு தண்டம் விதிக்கவும் சட்டத்தில் வகை செய்யப்படும் என சுட்டிக்காட்டி, பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.