மகாராஷ்டிராவில் சட்ட மேலவை தேர்தல் இம்மாதம் நடத்த தேர்தல் ஆணையம் அனுமதி - முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் பதவி தப்பியது
மகாராஷ்டிராவில் சட்ட மேலவை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளதால் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் பதவி தப்பியது.
மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்று 5 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், அவர் இன்னும் எம்.எல்.ஏ.வாக ஆகவில்லை. இந்த மாதம் 24-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த எம்.எல்.சி.
தேர்தலில் வெற்றி பெற்று தமது பதவியை காப்பாற்றி கொள்ள உத்தவ் தாக்கரே திட்டமிட்டு இருந்தார். ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பால் எம்.எல்.சி. தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டதால் உத்தவ் தாக்கரேக்கு நெருக்கடி ஏற்பட்டது.
ஆளுநர் ஒதுக்கீட்டின் கீழ் காலியாக உள்ள எம்.எல்.சி. பதவியில் உத்தவ் தாக்கரேயை நியமிக்க கோரிய மாநில அமைச்சரவையின் பரிந்துரை மீது ஆளுநர் முடிவு எடுக்கவில்லை. இதையடுத்து பிரதமர் மோடியுடன் தொலைபேசி மூலம் உத்தவ் தாக்கரே தொடர்பு கொண்டு உதவி கோரியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கையுடன் எம்.எல்.சி தேர்தலை நடத்த உத்தரவிடுமாறு தேர்தல் ஆணையத்திற்கு மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி கடிதம் எழுதியுள்ளார். இதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் பதவி தப்பியது.