கடைசிநாளில் களைகட்டிய வேட்புமனு தாக்கல்

தமிழகம் முழுவதும் கடைசி நாளில் வேட்புமனுதாக்கல் களைகட்டியது. சில இடங்களில் தள்ளுமுள்ளும், கைகலப்பும் ஏற்பட்டது.

Update: 2019-12-16 20:41 GMT
திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் ஊர்வலமாக வந்து அதிமுகவினர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதே போல் திமுக மற்றும் பாஜகவினரும் வேட்பு மனு தாக்கல் செய்ய தீவிரம் காட்டினர். 

மாட்டு வண்டியில் வந்து வேட்பு மனு தாக்கல் 



கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு  சாக்காங்குடி கிராமத்தை சேர்ந்த முருகவேல் என்பவர், மேளதாளங்கள் முழங்க  மாட்டு வண்டியில் பன்னீர் கரும்புகளை கட்டி கொண்டு ஆதரவாளர்களுடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

சில்லரை காசு கொடுத்து வேட்புமனு தாக்கல்



மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மூர்த்தி, வேட்பு மனு தாக்கலின் போது வைப்புத் தொகை அனைத்தையும் சில்லரை காசுகளாக தட்டுகளில் ஏந்தியவாறு வழங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. 

கை குழந்தையுடன் வேட்பு மனு தாக்கல் 



கும்பகோணம் அண்ணலக்கிரஹாரம் பகுதியைச் சேர்ந்த அனிதா,  ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவதற்காக  பிறந்த மூன்றே மாதமான தனது  கை குழந்தையுடன் வேட்பு மனு தாக்கல் செய்தார். இது அந்த பகுதியில் உள்ளவர்களை உற்று நோக்க வைத்தது.

வெங்காய மாலையுடன் வேட்பு மனு தாக்கல் 



திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட உள்ளாட்சி பதவிகளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய திமுக வேட்பாளர் கங்காதரன் வெங்காய மாலையை கழுத்தில் அணிந்து கொண்டு வந்தார். இதே போல் அதிமுக பெண் வேட்பாளர் தனது கை குழந்தையுடன் வேட்பு மனு தாக்கல் செய்தார். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு முன்பு ஆதரவாளர்கள் அதிகளவில் திரண்டதால் அங்கு சிறு தள்ளு முள்ளு ஏற்பட்டது.

எம்ஜிஆர் வேடமணிந்தவருடன் வந்து வேட்பு மனு தாக்கல்

 

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் அலுவலகத்தில் எம்ஜிஆர் வேடமணிந்தவருடன் வந்து அதிமுகவை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். எம்ஜிஆர் வேடமணிந்தவருடன் தொண்டர்கள் செல்பி எடுக்க ஆர்வம் காட்டினர்.

ஒரே பதவிக்கு அதிமுகவினர் இருவர் வேட்பு மனு தாக்கல் 



மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் 12வது வார்டின் மாவட்ட வார்டு உறுப்பினர்  பதவிக்கு அதிமுகவை சேர்ந்த இரண்டு பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதனால் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த இரு தரப்பினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

கனமழை - நனைந்தபடி வேட்பு மனு தாக்கல் 


திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கன மழை பெய்ததால், மழையில் நனைந்தபடி வேட்புமனு தாக்கல் செய்ய வந்தனர்.  
Tags:    

மேலும் செய்திகள்