"பிரதமர் அசாதாரண அமைதி காத்து வருகிறார்" - ப.சிதம்பரம் காட்டமான விமர்சனம்
நாட்டின் பொருளாதார மந்த நிலையை ஆராய்ந்து, முடிவுகள் எடுக்கத் தெரியாமல் அரசு திணறி வருவதாக முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் 106 நாட்களாக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ப. சிதம்பரத்துக்கு, உச்ச நீதிமன்றம் நேற்று ஜாமின் வழங்கியது. நேற்றிரவு சிறையில் இருந்து வெளிவந்த அவர், இன்றுகாலை மாநிலங்களவையில் கலந்து கொண்டார். அதன் பின்னர் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பொருளாதார சரிவு குறித்து, மோடி அசாதாரண அமைதி காத்து வருகிறார் என குற்றம் சாட்டினார். பொருளாதாரத்தை நிர்வகிக்க தெரியாத அரசாக உள்ளதாகவும், சரிவுக்கான காரணத்தை கண்டறியும் திறனும் இல்லை என்றும் கடுமையாக சாடினார். பணமதிப்பு நீக்கம், திட்டமிடாத ஜிஎஸ்டி, வரி அழுத்தங்கள் என திடீர் நடவடிக்கைகள் மூலம் பொருளாதாரம் தொடர்ந்து சரிந்து வருவதாக கூறிய அவர், வளர்ச்சி வீதம், வீழ்ச்சி அடைந்து நாடு மோசமான நிலைக்கு சென்று கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.