விஸ்வரூபம் எடுக்கும் வாட்ஸ்அப் உளவு விவகாரம் : "பிரியங்கா காந்தி, மம்தா செல்போன் ஒட்டுக்கேட்பு"

பிரியங்கா காந்தி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்களின் வாட்ஸ்அப் உளவு பார்க்கப்படுவதாக மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

Update: 2019-11-04 05:34 GMT
பிரியங்கா காந்தி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்களின் வாட்ஸ்அப் உளவு பார்க்கப்படுவதாக மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இஸ்ரேல் நிறுவனம் உருவாக்கியுள்ள பெகாசஸ் மென்பொருள் மூலம், தலைவர்களின் செல்போன் உளவு பார்க்கப்படுவதாக வாட்ஸ்அப் நிறுவனமே ஒப்புக்கொண்டுள்ளது. இதனிடையே, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் வாட்ஸ் அப் தகவல்களை இஸ்ரேல் நிறுவனத்துடன் இணைந்து, மத்திய அரசு சட்டவிரோதமாக உளவு பார்த்திருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

இது மிகப்பெரிய மனித உரிமை மீறல், தேச பாதுகாப்புக்கும் எதிரானது என்று குறிப்பிட்டுள்ள அக்கட்சி, இந்த விவகாரத்தில் மத்திய அரசு சதி செய்து, மவுனத்தை கடைப்பிடிப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளது. இதேபோல், தனது செல்போனும் உளவு பார்க்கப்படுவதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் குற்றம்சாட்டியுள்ளார். உளவு பார்த்த நிறுவனம் தனிநபர்கள் பற்றிய தகவல்களை அரசுக்கு வழங்கி இருப்பது தவறான நடவடிக்கை என சாடியுள்ள மம்தா இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு, இதுபோன்று நடைபெறாமல் தடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். தலைவர்களின் வாட்ஸ்அப் உளவு பார்க்கப்படும் விவகாரம், வரும் 13ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் விஸ்வரூபம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்