கர்நாடகா : சட்டப்பேரவையிலேயே சாப்பிட்டு தூங்கிய பாஜக எம்எல்ஏக்கள்
கர்நாடக சட்டமன்றத்தில் இன்று பிற்பகல் ஒன்றரை மணிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் குமாரசாமிக்கு ஆளுனர், அவசர கடிதம் எழுதியுள்ளார்.
முதலமைச்சர் குமாரசாமி அரசு நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது கர்நாடக சட்டமன்றத்தில் நேற்று விவாதம் தொடங்கியது. அவை கூடியதும் முதலில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா நம்பிக்கை ஓட்டெடுப்பை உடனடியாக நடத்தி முடிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் நம்பிக்கை ஓட்டெடுப்பை அவசரமாக நடத்த முடியாது என்று கூறினார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர் குமாரசாமி, தமது அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் கூறப்படுவதாகவும், கூட்டணி ஆட்சி குறித்து ஆரம்பம் முதலே சிலர் தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
பின்னர் பேசிய கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா உச்சநீதிமன்ற தீர்ப்பில் குழப்பம் உள்ளதாகவும், இதனால் நம்பிக்கை ஓட்டெடுப்பை தள்ளி வைக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார். கொறடா உத்தரவை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தக்கூடாது என கர்நாடக சட்ட அமைச்சர் கூறினார். இதனை தொடர்ந்து, அவையில் கடும் அமளி நிலவியதால், அவையை இன்று காலை 11 மணி வரை சபாநாயகர் ஒத்தி வைத்தார்.