கர்நாடக அமைச்சரவை நாளை காலை அவசரமாக கூடுகிறது - ஆட்சியை கலைக்க ஆளுநருக்கு பரிந்துரைக்கப்படும் என தகவல்
முதலமைச்சர் குமாரசாமி நாளை அமைச்சரவை கூட்டத்தை கூட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உள்பட 16 பேர் ராஜினாமா செய்துள்ளனர். மேலும் 2 சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர். மேலும் அதிருப்தி எம்எல்ஏக்கள் 8 பேர் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளதால் குமாரசாமி அரசு தனது பெறும்பான்மையை இழந்துள்ளது. இந்த நிலையில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் முன்னதாக சட்டசபை மாண்புகளை காப்பாற்ற நாளை 11 மணிக்கு அவசரமாக அமைச்சரவையை கூட்ட குமாரசாமி முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் பிறகு ஆட்சியை கலைக்க ஆளுநருக்கு பரிந்துரைக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் பாஜக ஆட்சி அமைப்பதற்கான வியூகங்களை மறைமுகமாக செய்து வருவாதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் :
இதனிடையே, பெங்களூரூவில் உள்ள ராஜ்பவனில், பா.ஜ.க. விற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், கைது செய்யப்பட்டார். கர்நாடக அரசியலில் குழப்பம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தில், அம்மாநில சபாநாயகருக்கு எதிராக மனுதாக்கல் செய்துள்ளனர். ராஜினாமா கடிதம் மீது முடிவெடுப்பதில் திட்டமிட்டே காலதாமதம் செய்வதாக தங்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.இந்த மனு மீதான விசாரணை வியாழக்கிழமை நடைபெறுகிறது.
சட்டப்பேரவை வளாகத்தில் 144 தடை :
பெங்களூரு சட்டப்பேரவை வளாகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.நாளை முதல் வரும் 14ஆம் தேதி வரை நான்கு நாட்கள், இந்த உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் காங்கிரசுக்கு எந்த தள்ளாட்டமும் இல்லை - கே.எஸ். அழகிரி
கர்நாடகாவில், காங்கிரஸ் கட்சிக்கு எந்த தள்ளாட்டமும் இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகாவில் பா.ஜ.க. குதிரை பேரம் நடத்தி வருவதாகவும், இதற்கு எதிராக காங்கிரஸ் செயல்பட்டு வருவதாகவும் கூறினார். எப்பொதும், நேர்மை தான் வெல்லும் என்றும், பா.ஜ.க. வின் பண அரசியல், ஜாதி அரசியல், மத அரசியல் செல்லாது என்றும் கே.எஸ்.அழகிரி குறிப்பிட்டார்.