காலியான எதிர்க்கட்சி தலைவர் பதவி... : எதிர்க்கட்சி தலைவர் பதவி பெற தேவையான தகுதிகள்
மக்களவையில் இந்த முறையும், எதிர்க்கட்சி தலைவர் பதவி காலியாகவே தொடர்கிறது.
அரசியல் சாசன விதிமுறைகளின்படி, மக்களவையில் உள்ள மொத்த இடங்களில் குறைந்தபட்சம் 10 சதவீத இடங்களை வெல்லும் கட்சியின் தலைவர் தான், எதிர்க்கட்சி தலைவர் என்ற பதவியை பெறுவார். அதாவது குறைந்தது 55 எம்.பிகளை கொண்ட கட்சியின் தலைவர். இது அனைத்து கூட்டணி கட்சிகளின் எம்.பிகளின் மொத்த எண்ணிக்கையை கொண்டு முடிவு செய்யப்படுவதில்லை. ஒரு அரசியல் கட்சியின் எம்.பிகளின் எண்ணிக்கையை மட்டும் வைத்து முடிவு செய்யப்படுகிறது. மக்களவையில் உள்ள எதிர்கட்சிகளில், அதிக எண்ணிக்கையிலான எம்.பிகளை கொண்ட கட்சி என்பதால் மட்டும் இந்த பதவி கிடைக்காது. இந்த 10 சதவீத விதிமுறையை, முதலாவது மக்களவையின் சபாநாயகர் ஜி.வி.மவலங்கர் பிரகடனப்படுத்தினார்.
நேரு தலைமையிலான காங்கிரஸ் கட்சி 1952 ஆம் ஆண்டு பொது தேர்தல்களில் பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த போது, எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கும் கிடைக்கவில்லை. 1969 ஆம் ஆண்டு வரை, முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது மக்களவைகளில் இந்நிலை நீடித்தது. 1969இல் காங்கிரஸ் கட்சி உடைந்த பின், காங்கிரஸ்(அமைப்பு) கட்சியை சேர்ந்த ராம் சுபாக் சிங், 1970 வரை மக்களவை எதிர்கட்சி தலைவராக இருந்தார். இந்தியாவின் முதல் எதிர்கட்சி தலைவர் இவர் தான்.
1970-77இல் ஐந்தாவது மக்களவையில், எதிர்கட்சி தலைவர் பதவி மீண்டும் காலியாக இருந்தது. 1980-84இல், ஏழாவது மக்களவையிலும், 1984-89இல் எட்டாவது மக்களவையிலும் எதிர்கட்சித் தலைவர் பதவி காலியாக இருந்தது. 1989 முதல் 2014 வரை எதிர்கட்சி தலைவர் பதவி காலியாக இல்லை.