சமூக வலைதள பிரசாரங்கள் கட்சிகளுக்கு கைகொடுக்குமா?
தேர்தல் திருவிழா களைகட்டியுள்ள நிலையில், கடும் வெயிலையும், பொருட்படுத்தாமல் வாக்கு வேட்டை நடத்தி வருகின்றன அரசியல் கட்சிகள்.
* தேர்தல் பிரசாரங்கள் செய்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தேர்தல் ஆணையம். சுவரெழுத்து, போஸ்டர்கள், பேனர்கள் என வழக்கமான பிரசார வடிவங்கள் எதையும் பார்க்க முடியவில்லை. ஆனால் அந்த இடத்தை பிடித்துள்ளன நவீன பிரசார வடிவங்கள். தொலைக்காட்சி, இணையதளம், செல்போன் குறுஞ்செய்தி, செயலி என அனைத்து வகையான மின்னணு முறை பிரசாரங்களிலும் பிசியாக உள்ளன அரசியல் கட்சிகள்.
* கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மின்னணு வடிவங்களில் மொபைல் குறுஞ்செய்தி ஆதிக்கம் செலுத்தியது. எஸ் எம் எஸ், வாய்ஸ் மெசேஜ் மூலம் வாக்கு சேகரிக்கப்பட்டன. தற்போது வாட்ஸ் அப், பேஸ்புக், யு டியூப், டிக் டாக், ஷேர் சாட் என அனைத்து சமூக வலைத் தளங்கள் வழியாகவும் வாக்கு சேகரிப்பது ட்ரண்ட் ஆகி வருகிறது.
* சமூக வலைத்தள பிரசாரங்களுக்கு கட்டுப்பாடுகள் இல்லை என்பதால் தவறான தகவல்களும், வதந்திகளும், உண்மைக்கு மாறான செய்திகளும் வெளியாகின்றன. அதன் காரணமாக தேர்தல் வெற்றி தோல்விகளில் தாக்கம் ஏற்படுவதால் இந்த தேர்தலில் சமூக வலைத்தள பிரசாரங்கள் கண்காணிக்கப்படுகின்றன. அந்த நிறுவனங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி, உண்மைக்கு மாறான தகவல்களை நீக்க அறிவுறுத்தியதன் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி பக்கங்களும், வாட்ஸ் அப் குழுக்களும் நீக்கப்பட்டுள்ளன.
* இப்படியான சமூக வலைத்தள பிரசாரங்களில் முன்னணியில் உள்ள கட்சி பிஜேபிதான். அதற்கடுத்து காங்கிரஸ் கட்சி உள்ளது. ஒவ்வொரு வாக்கு சாவடிக்கும் 3 வாட்ஸ் அப் குழுக்களை பாஜக உருவாக்கியுள்ளதாக தகவல்கள் சொல்கின்றன. அதுபோல காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளும் வாக்குச் சாவடி வாரியாக வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கியுள்ளன.
* கட்சிகளின் அனுதாபிகளைத் தாண்டி, யோசித்து முடிவெடுக்கும் மனநிலையில் உள்ளவர்களுக்கு சமூக வலைத்தள பிரசாரங்கள் கைகொடுக்கின்றன. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் தீவிரமாக இருக்கும் இளைஞர்களிடம் அதன் தாக்கம் அதிகமாக உள்ளதுடன், குழப்பத்தில் இருக்கும் மூத்த குடிமக்களும் அதை பார்த்து முடிவெடுப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.
* சமூக வலைத்தளங்களில் பிரசாரம் செய்வது செலவு குறைந்த வழி என்பதுடன், உடனடி விளைவுகள் கிடைக்கும் என்பதால் கட்சிகளின் விருப்பமாக மாறியுள்ளது. உண்மை எது ? பொய் எது ? என அறிந்து கவனமாக செயல்பட வேண்டியது மக்களின் கடமையாக மாறியுள்ளது.