இதுவரை பா.ம.க. அமைத்த கூட்டணி...

பா.ம.க.வின் கடந்த கால கூட்டணி கணக்குகளைச் சொல்கிறது இந்த தொகுப்பு.

Update: 2019-02-20 03:12 GMT
1989ம் ஆண்டு துவங்கப்பட்ட பாமக கட்சி, அந்த ஆண்டிலேயே நாடாளுமன்ற தேர்தலில் தனியாக களமிறங்கி சுமார் 16 லட்சம் வாக்குகளை பெற்றது. 1991 சட்டப்பேரவை தேர்தலிலும் தனியாக களமிறங்கிய பாமக, ஒரு தொகுதியில் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குள் நுழைந்தது. அந்த கட்சியின் முதல் எம்எல்ஏ பண்ருட்டி ராமச்சந்திரன். 

1996ம் ஆண்டு தேர்தலில் கூட்டணி அரசியலுக்குள் நுழைந்த பாமக. அந்த தேர்தலில் மதிமுக, மார்க்சிஸ்ட் மற்றும் வாழப்பாடி ராமமூர்த்தியின் கட்சிகளோடு 3வது அணியை பாமக அமைத்தது. 1998ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் முதன் முறையாக அதிமுக உடன் பாமக கை கோர்த்தது. இந்த கூட்டணியில் பாஜகவும் இடம் பெற்றிருந்தது.

1999ம் ஆண்டு மத்தியில் வாஜ்பாயி ஆட்சி கவிழ்ந்து, நாடாளுமன்ற தேர்தலை அறிவித்ததும் திமுகவுடன் பாமக கூட்டணி அமைத்தது. அதன்பிறகு, 2001ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தமாகா உள்ளிட்ட கட்சிகளுடன் மெகா கூட்டணியை அதிமுக அமைத்தபோது, அதில் பாமக இடம் பெற்றது. 

ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், கூட்டணியில் இருந்து வெளியேறிய பாமக, 2004ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக அணியில் சேர்ந்தது. 2006 சட்டப்பேரவை தேர்தலிலும் இந்த கூட்டணி நீடித்தது. அதன்பிறகு, 2009 நாடாளுமன்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுக கட்சிகளுடன் அதிமுக அமைத்த மூன்றாவது அணியில் பாமகவும் சேர்ந்து கொண்டது. 

2011 சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் திமுகவுடன் கூட்டணி அமைத்த பாமக, 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது, பாஜக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றது. பின்னர், 2016ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில், அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து பாமக தனித்தே களமிறங்கியது. இந்த சூழ்நிலையில், நடைபெற உள்ள 2019 நாடாளுமன்ற தேர்தலில், 10 ஆண்டுகளுக்கு பிறகு அதிமுகவுடன் பாமக மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்