தமிழகத்தில் அடுத்தது என்ன..? இருதுருவ அரசியலா..? மாற்று அரசியலா..?

தமிழகம் இனி சந்திக்க போவது இருதுருவ அரசியலா? மாற்று அரசியலா என்ற பேச்சு எழுந்துள்ள நிலையில் இரண்டு கட்சிகளும் கூட்டவுள்ள செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Update: 2018-08-22 11:27 GMT
அ.தி.மு.க. நாளை தனது செயற்குழுவை கூட்டுகிறது. தி.மு.க. 28ம் தேதி பொதுக்குழு கூட அழைப்பு விடுத்துள்ளது. தி.மு.க.வின் பொதுக்குழுவில் அக்கட்சியின் புதிய தலைவரும், பொருளாளரும் அறிவிக்கப்பட இருக்கிறார்கள்.

 கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு அவர் வகித்த தலைவர் பதவிக்கு ஸ்டாலினும், ஸ்டாலின் வகித்துக் கொண்டிருக்கும் பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் தேர்வாகிறார்கள். 

இன்னொரு பக்கம் கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கம் என அழகிரியின் அரசியலும் ஆரம்பமாகியுள்ளது. செப்டம்பர் 5ம் தேதி சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலையிலிருந்து மெரீனாவில் இருக்கும் கருணாநிதி நினைவிடம் வரை தனது ஆதரவாளர்களை திரட்டி தன் பலம் காட்ட அழகிரி தயாராகி வருகிறார். 

திராவிட கட்சிகள் மீது நம்பிக்கை போய்விட்டதா? ரஜினி கமல் தினகரன் என புதிய தலைவர்களை சுற்றி தமிழக அரசியல் சுழலப் போகிறதா ஆகிய கேள்விகள் தி.மு.க.வின் புதிய தலைவராகப் போகும் ஸ்டாலின் முன் நிற்கின்றன. 

தொண்டனின் கொள்கை மாறாத குணம், கட்டுக்கோப்பான இயக்கம் ஆகிய கேடயங்கள் ஸ்டாலின் கையில் இருப்பது அவருக்கு கூடுதல் பலம். 

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கூட்டப்பட வேண்டும் என்ற விதியின் கீழ் அ.தி.மு.க. செயற்குழு நாளை கூடினாலும், அக்கட்சியினர் மத்தியில் இக்கூட்டமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம் இ.பி.எஸ். ஒ.பி.எஸ் அணிகள் இணைந்தாலும் இன்னும் தொண்டர்கள் மத்தியில் இடைவெளி இல்லாமல் இல்லை என்பது அக்கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மத்தியில் உள்ள பேச்சு. 

அ.தி.மு.க. சட்ட விதிகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களை ரத்து செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி தொடுத்துள்ள வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்க, அதையும் எதிர்கொண்டுள்ளது அ.தி.மு.க. கூடவே அ.தி.மு.க. சட்ட விதிகளில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர்  என்ற பதவிகளுக்கு இடம் இல்லை என்பதும் வழக்கின் முக்கிய அம்சம். 

அதிமுக செயற்குழுவின் பிரதான நோக்கம் உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்துவது, நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது, திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் வெற்றிக்கனி பறிப்பது என்பதுதான். 

ஆனால் இதையும் தாண்டி கோடியைத் தாண்டியுள்ள தொண்டர்கள் உள்ள கட்சியில், ஐம்பதுக்கும்  குறைவானவர்கள் அதிகாரம் செலுத்தி ஆளுமை காட்டுவதுதான், உட்கட்சி ஜனநாயகமா என்ற கேள்வி செயற்குழுவில் புயலைக் கிளப்பும் என்கிறார்கள் ரத்ததின் ரத்தங்கள். 

அந்த ஐம்பது பேர் யார்? இவர்களுக்கு எதிராக கேள்வி எழுப்புபவர்கள் யார் என்பதெல்லாம் அக்கட்சியின் தொண்டர்களுக்கே வெளிச்சம். அரசியலில் எதிர்காலத்தை கணிக்க முடியாது. ஆனால் தமிழக அரசியலை தற்போது தன்பக்கம் வைத்திருப்பது இரண்டு கட்சிகள் தான்.
Tags:    

மேலும் செய்திகள்